அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நேரில் ஆஜராக சம்மன் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல்
ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுகவில் இரண்டாக பிளவுபட்டுள்ளது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஓ.பன்னீர் செல்வம் கடும் அதிருப்தி தெரிவித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் எதிர்ப்புக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும் புதிய பொதுக்குழுவிற்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் கோபத்திற்குள்ளான ஓபிஎஸ் கூட்டத்தில் இருந்து வெளியேறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே கடந்த ஜூலை 11 ஆம் தேதி இபிஎஸ் அணியினர் அறிவித்தது போல் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பங்கேற்க இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் சென்ற நிலையில், ஓபிஎஸ் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
இதனால் அதிர்ச்சி அடைந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் செல்ல முடியாத படி தடுப்புகளை ஏற்படுத்தினர். அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலக கதவுகள் உடைக்கப்பட்ட பின்னர் ஓபிஎஸ் உள்ளே சென்றார். இந்த கலவரத்திற்குள் மத்தியில் ஓபிஎஸ் வந்த வாகனத்தில் அதிமுக அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ்- இபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்த நிலையில் இபிஎஸ்யிடம் அலுவலக சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து அதிமுக அலுவலக சாவியை பெற்றுக்கொண்ட சி.வி.சண்முகம் அலுவலகத்திற்குள் சென்று பார்த்தார். அப்போது அதிமுக அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள், கணினிகள் என, ஏராளமான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் கூறியிருந்தார்.
சிபிசிஐடி ஓபிஎஸ்க்கு சம்மன்..?
இதனையடுத்து ராயப்பேட்டை போலீசார், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, திருட்டு உட்பட, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதிமுக அலுவலக வழக்கின் விசாரணை அதிகாரியாக, டி.எஸ்.பி., வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா, ரேணுகா உள்ளிட்டோரும் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்த குழுவினர் விசாரணையை துவக்கி உள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நேரில ஆஜராகும் படி சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
அமித்ஷாவை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..? என்ன காரணம் தெரியுமா..?