
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பால்சாமி. இவரது மகன்கள் அழகர், முருகன், ஜெயக்குமார், சரவணக்குமார், செந்தில்குமார். இவர்கள் மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் கிளாட்வே, ஜெயபாரத், அன்னை பாரத், கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தொடர் புகார்கள் வந்தன.
இதையும் படிங்க;- 20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி ரெய்டு.. கலக்கத்தில் அதிமுக முக்கிய புள்ளிகள் !
இதனையடுதத்து, நேற்று சென்னையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை வந்தனர். பின்னர், அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அவனியாபுரத்தில் உள்ள ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி புரோமோட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் 2-வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 10 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள கிளாட்வே, அன்னை பாரத் சிட்டி, கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனம் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள சில நிறுவனங்கள் கடந்த அதிமுக ஆட்சியின் போது இவர்கள் நெருக்கமான இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!