தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளைச் சட்ட விரோதம் என அறிவிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர், 10 ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்கள், “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல் காலவரையின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடியாது” என்றார்.
இதனையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அந்த நோட்டீஸில், “மக்களின் உரிமைகளைச் சிதைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார்” என்ற தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 20 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது. “மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அல்லது அவருக்குப் பதிலாக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என்றுஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200 இன் படி, மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் கோரி அனுப்பப்படும் கோப்புகள் மீது அவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2020 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுகளைக் கூட பரிசீலிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், “தமிழ்நாடு அரசு அனுப்பிய சட்ட முன் வடிவுகளை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாக பொருள்” என்று அகந்தையோடு தெரிவித்தார்.
ஆளுநரை டிஸ்மிஸ் செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் - வேல்முருகன் ஆலோசனை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 12 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றம் கடுமையான கருத்தை தெரிவித்த உடன் அவசர அவசரமாக 10 சட்ட முன் வடிவுகளையும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார். உடனடியாக தமிழ்நாடு அரசு இன்று நவம்பர் 18 ஆம் தேதி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பேரவை விதி 143 ன் படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி தீர்மானம் கொண்டு வந்து 10 சட்ட முன் வடிவுகளையும் மீண்டும் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 200 வது பிரிவின் படி, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.