அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் நலிந்தோர் நலவாழ்வு பெற்றார்கள், அதிமுக ஆட்சி கால அமைச்சர்களை எளிதில் சந்திக்கலாம், அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கூட்டணிக்கு கை கொடுக்கும் கட்சி த.மா.கா
காமராஜார் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஜி.கே.வாசன், பதவிக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பமாக இருக்கும் கட்சி த.மா.கா, கூட்டணிக்கு கை கொடுக்கும் கட்சி த.மா.கா என தெரிவித்தார். தமாகாவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது அங்கீகாரம் இழந்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி என கூறிய அவர் திமுக ஆட்சியில் கொலை , கொள்ளை மட்டுமே நடந்து வருவதாக விமர்சித்தார். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் நலிந்தோர் நலவாழ்வு பெற்றார்கள், அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களை எளிதில் சந்திக்கலாம், அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டதாக தெரிவித்தார்.
திமுக அரசு ராஜினாமா செய்யட்டும்
ஆனால் தற்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளதாக கூறினார். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் மற்ற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் சாதனை படைத்து வருகின்றனர்.எனவே இதனை புரிந்து திமுக அரச இனி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இரண்டு ஆண்டு கால தாமதமாக வழங்கும் மகளிர் உரிமைத்தொகையில் ஏன் இத்தனை பாகுபாடு என கேள்வி எழுப்பியவர், இரண்டு கோடி பெண்களுக்கு கூட மகளிர் உரிமைத்தொகை வழங்க முடியாத திமுக அரசு ராஜினாமா செய்யட்டும் என கூறினார். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கோரிக்கை வைத்தது. இன்னும் 7 மாதங்களில் பொங்கல் வருகிறது. குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் முதலில் போராட்டம் நடத்தும் இயக்கமாக த.மா.கா. இருக்கும் என கூறினார்.
திமுக ஆட்சி- டாஸ்மாக் ஆட்சி
தமிழகத்தில் அனைத்து நிலையிலும் போதை தலைவிரித்தாடுகிறது. 2 ஆண்டுகளாக அதை தடுக்க முடியாமல் தமிழக அரசு தடுமாறுகிறது. சட்டம்-ஒழுங்கு சீர் குலைவுக்கு டாஸ்மாக் மட்டுமே காரணம். தமிழகத்தில் நடப்பது டாஸ்மாக் மாடல் ஆட்சியாக உள்ளதாக தெரிவித்தவர், வரும் தேர்தலில் திமுகவை அகற்ற பொதுமக்கள் உறுதி ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அனைத்து மாநிலம் , அனைத்து மக்களும் , இந்தியா முன்னேற வேண்டும் என்ற கொள்கையோடு பிரதமர் மோடி உழைத்து வருவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்