
ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சம ஊதியக் கோரிக்கை என்பது நியாயமானது. ஒன்றிய அரசிலும், மாநில அரசிலும் பணியில் சேரும் மருத்துவர்களுக்கு ஒரே மாதிரியாக ரூ.56,100 ஊதியம் வழங்கப்படும் நிலையில், பணி ஓய்வின்போது ஒன்றிய அரசு மருத்துவர்களை விட மாநில அரசு மருத்துவர்களுக்கு ரூ.45,000 குறைவாக வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க;- தமிழக பெண்கள் பலாத்காரம்!பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி இரும்பு கம்பியால் சித்ரவதை! வேல்முருகன் பகீர் தகவல்
குறிப்பாக, 4,9,13,20 ஆண்டுகள் கழித்து ஒன்றிய அரசு மருத்துவர்கள் காலம் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் பெறுகின்றனர். இதன் விளைவாக, 7வது ஊதியக் குழுவில், 13 ஆண்டுகள் முடித்து 14வது ஆண்டில் ரூ.1,23,000ஐ, ஒரு ஒன்றிய அரசு மருத்துவர் அடிப்படை ஊதியமாக பெறுகின்றார். ஆனால், தமிழ்நாட்டில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு மறுக்கப்படுவதால், ஒரு ஒன்றிய அரசு மருத்துவர், 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை, நம் மாநில அரசு மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தும், ஒன்றியத்தில் 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை 17 ஆண்டுகள் கழித்தும், ஒன்றியத்தில் 13 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற ஊதிய உயர்வை, நம் மாநில அரசு மருத்துவர் 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக, ஒன்றிய அரசு மருத்துவர் 13 ஆண்டுகளில் பெறுகின்ற ரூ.1,23,00ஐ அடிப்படை ஊதியமாக பெறுகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர் ரூ.86,000ஐ மட்டுமே அடிப்படை ஊதியமாக பெறுகின்றனர். அதாவது, ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படுவதுதான் இந்த ஊதிய முரண்பாட்டுக்கு காரணம். இந்த அநீதிக்கு, அரசாணை எண் 354இல் உள்ள எதிர்கால சரத்துகளைப் பயன்படுத்தி தீர்வு காண முடியும். ஆனாலும், இந்தக் கோரிக்கை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது.
இதையும் படிங்க;- ED-ஐ பணி செய்யவிட்டால், மொரிஷியசில் இருக்கும் செந்தில் பாலாஜியின் பணத்தை கொண்டு வந்துடலாம் - அண்ணாமலை
மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்குக் காரணம் அரசு மருத்துவர்கள் தான். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு அரசின் கடமையாகும். திமுக ஆட்சியில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு மருத்துவர்கள் நம்பி இருக்கின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு, கல்வி தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடும் மருத்துவர்கள் மீது போடப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.