நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில்,சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு பங்கேற்றுள்ளனர்.
நீட் தேர்வால் தொடரும் தற்கொலை
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்க நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்ற திமுக அரசு, நீட் விலக்கிற்காக மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த மோசதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். சுமார் ஒரு வருட காலமாக குடியரசு தலைவர் மாளிகையில் சட்ட மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த திமுக
இந்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியாத காரணத்தால் கடந்த வாரம் ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகம் தாங்காமல் அந்த மாணவனின் தந்தையும் தற்கொலை செய்தார். இதனால் நீட் தேர்வு ரத்து தொடர்பான குரல் மீண்டும் தமிழகத்தில் எழுந்தது. இதனையடுத்து நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக ஆளுநர் ரவியின் பேச்சை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என திமுக சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுக சார்பாக உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது. மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற இருப்பதால் அந்த பகுதியில் மட்டும் உண்ணாவிரத போராட்டம் வருகிற 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உதயநிதி காலத்தில் நீட் தேர்வு ஒழியும்
இந்தநிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை மூத்த அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், மோடி அரசு நீட் தேர்வை திணிப்பதில் வேகமாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக எத்தனையோ இளம் சிட்டுக்கள் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டு உள்ளனர். அதைப்பற்றி மத்திய கவலை கொள்ளவில்லை.
நீட் தேர்வுக்கு பலர் விடும் சாபம் இந்த ஆட்சியை ஒழித்து விடும். உதயநிதி காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது என்ற வரலாறு, சரித்திரத்தில் இடம் பெறும்; அதைச் செய்யும் ஆற்றல் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது என தெரிவித்தார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் அந்த அந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்