அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தான் தொடர்வார், எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் கட்சியின் பொதுச்செயலாளராக முடியாது என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:- நேற்று வெளியான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிமுகவே எடப்பாடி பழனிசாமி கைக்கு போனது போல் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தீர்ப்பின் முழுமையான நகலில் 38 பகுதியில் சில அம்சம் பேசப்பட்டு இருக்கிறது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கு குறித்து சிவில் நீதிமன்றத்தில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளனர். எனவே அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றி விட்டார் என கூறுவது சுத்தமான பொய்.
நேற்று வந்த உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பில் பொது குழு நடந்ததா இல்லையா என்பது மட்டும் தான் தீர்ப்பில் வந்தது. மற்றபடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது எதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்டியல்ல அதிமுக - ஓ.பி.எஸ். அதிரடி
அதிமுகவின் பொதுச் செயலாளர் என்பது ஜெயலலிதா வகித்த பதவி. அது அவருக்காக ஒதுக்கப்பட்டது. அதை மற்றவர்கள் யாரும் வகிக்க கூடாது. அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிட்டார், ஓபிஎஸ் தனிமையாகப்பட்டார், ஓபிஎஸ் தோற்றுவிட்டார் என கூறுவது அனைத்தும் தவறு. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பணம் மழை பொழிகிறது. எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் மீசை வச்ச ஆம்பளையா இருந்தால் வா மோதிப் பார்க்கலாம் என பேசுகிறார். ஆனால் திமுகவினர் சீமானுடன் மட்டும் பிரச்சனை செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் எந்த ஒரு பிரச்சினையிலும் ஈடுபடவில்லை. என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. யாராக இருந்தாலும் தன்மானத்தை விட்டு அரசியல் செய்ய வேண்டாம்.
அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு.இந்த தீர்ப்பு பெரிய டானிக் போல இருந்தது இனிமே அவர் தூங்கவே முடியாது அவரை நாங்கள் தூங்க விடவே மாட்டோம்.பொதுச் செயலாளர்கள் கனவை அவர் மறந்து விட வேண்டும். ஒருவர், இருவர் அல்ல ஆயிரக்கணக்கானோர் வழக்கு தொடர்வோம்.
பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி அடையவே முடியாது தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தான் இருப்பார் இதை சபதமாக ஏற்றுக்கொள்கிறேன் இவ்வாறு கூறினார்.