எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு
வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்கள் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மின்சார வாரியத்திற்கு 2021-2022ஆம் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன என்று ஏற்கெனவே எனது முந்தைய அறிக்கையில் தெளிவாகக் கூறியிருந்தேன்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற இந்த விடியா தி.மு.க. அரசு, எந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தாமல், செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வெளியில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி, தமிழக மின்சார வாரியத்திற்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
நாளை தமிழகம் வரும் அமித்ஷா..! இபிஎஸ்க்கு போட்டியாக ஓபிஎஸ் போடும் பிளான்.. பலிக்குமா?
8 வருடமாக மின் கட்டணத்தை உயர்த்த வில்லை
தற்போது வணிக நிறுவனங்களும், சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளும் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அவர்களுக்கு இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கும், அதன் பொம்மை முதலமைச்சருக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மின் வாரியம் என்பது லாப நஷ்டம் பார்த்து இயங்கக்கூடிய வணிக நிறுவனம் அல்ல. இது ஒரு சேவைத் துறை. இதைத்தான் அம்மாவின் அரசு 8 வருடங்களாக செயல்படுத்தி, தமிழக மக்களுக்கு மின் கட்டண உயர்வே இல்லாமலும், மின் வெட்டு இல்லாமலும், மின்சார வாரியத்தின் இழப்பை மாநில அரசின் நிதியைக் கொண்டு சரிசெய்து வந்தது.
ஒரு வருடத்திற்குள் மீண்டும் உயர்வு.?
பொதுவாக மத்திய அரசு, எரிபொருள் மற்றும் கொள்முதல் விலைக்கேற்ப வருடந்தோறும் மின் கட்டணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் கூறும். இழப்பு ஏற்பட்டால் மாநில அரசின் நிதியைக் கொண்டு சரி செய்தும் கொள்ளலாம். கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அம்மாவின் அரசும் அதன்படியே 8 ஆண்டுகளாக மின் வாரியத்தின் இழப்பை மக்கள் தலையில் சுமத்தாமல், மின் வாரியத்திற்கு மானியம் வழங்கி மின் கட்டண உயர்வு இல்லாமல் நிர்வாகத் திறமையுடன் ஆட்சி செய்தது.
ஆட்சிக்கு வந்த உடனே. பல மடங்கு மின் கட்டண உயர்வை அமலுக்குக் கொண்டு வந்த இந்த விடியா திமுக அரசு, ஒரு வருடத்திற்குள் மீண்டும் வீட்டு இணைப்பு, வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு என்ற செய்தியை முதலில் வெளியிட்டது. ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக மக்கள் அனைவரின் எதிர்ப்பையும் பார்த்தவுடன், வீட்டு இணைப்பு தவிர வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்தார்
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அதுவும், இந்தக் கோடை காலத்தில் மின் வெட்டால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். துறைதோறும் கமிஷன் அடிப்பதையே கொள்கையாகக் கொண்ட இந்த விடியா திமுக அரசு, வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
அம்மா ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்ததை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கட்டணத்தைக் கணக்கிடுவோம் என்று சொன்ன இந்தத் திறமையற்ற அரசு, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை மின் கட்டண உயர்வு என்ற சுமையை தமிழக மக்களின் தலையில் ஏற்றியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி செய்யத்தான் வாக்களித்தனர்
மக்களுக்குத் தேவையில்லாமல் கட்டணச் சுமையை ஏற்றும்போதெல்லாம், குறிப்பாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளாட்சிக் கட்டணங்கள் உயர்வு, மறைமுக பேருந்துக் கட்டணம் மற்றும் ஆவின் பால் விலை உயர்வு என்று கட்டணத்தை உயர்த்தும்போது, வசதியாக மத்திய அரசையும், இதர மாநிலங்களையும் விடியா தி.மு.க. அரசு துணைக்கு அழைத்துக் கொள்கிறது. மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை, கழக ஆட்சிக் காலங்களில் செய்தது போல் மாநில அரசே ஏற்றுக்கொண்டிருக்கலாம். அதேபோல், வாக்காளர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யத்தான் வாக்களித்தார்களே தவிர, மற்ற மாநிலங்களை ஆள்வதற்கு அல்ல. எனவே, இனியாவது மத்திய அரசையும், அண்டை மாநிலங்களையும் துணைக்கு அழைப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு விடுத்த இபிஎஸ்.! என்ன காரணம் தெரியுமா.?