டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு பிற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர் பாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக, விசாரணைக்கு ஆஜராகும் போதே தன்னைக் கைது செய்து விடுவார்கள் என மணிஷ் சிசோடியா சொன்னதைப் போலவே, மத்திய அரசின் சி.பி.ஐ அவரைத் தற்போது கைது செய்து, 5 நாள் காவலையும் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மீது, மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவி விடும் போக்கு பாஜகவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகளையும் தனது கூட்டணிக் கட்சிகள் போல் ஆட்டுவித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் போக்கு கவலைக்குரியது.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, அப்பட்டமான சட்டவிரோதம். புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம் இந்த ஆட்சியில் காற்றில் பறந்துள்ளது போல் வேறு எந்த ஆட்சியிலும் நடைபெற்றதில்லை என்பதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகக் குறிவைத்து கைது செய்யப்படுவதில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு பதவியேற்றது முதலே, தங்கள் கொள்கைக்கு எதிராகச் சிந்திக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரையும் குறிவைத்து அச்சுறுத்தும் போக்கு தொடங்கி விட்டது.
பாஜகவின் இத்தகைய அதிகார அச்சுறுத்தலுக்கான ஆக்டோபஸ் கரங்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளை நோக்கி மிக வேகமாக, அராஜகமாக நீண்டு வருகிறது. "சி.பி.ஐ கைது செய்ய விரும்பவில்லை. ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது" என டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கேஜ்ரிவால் முன் வைத்துள்ள குற்றச்சாட்டினையும் எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது.
இதையும் படிங்க..Exit Poll : வடகிழக்கு இந்தியாவை கைப்பற்றும் பாஜக - கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன.? ஒரு பார்வை
மத்திய பாஜக அரசின் மீது அடுக்கடுக்காக எழுந்து வரும் இமாலயக் குற்றச்சாட்டுகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே இந்தக் கைது நடவடிக்கையை ஆளும் தரப்பு எடுத்து வருகிறது. அதிகாரத்தில் இருக்கும்போது அதன் அமைப்புகளை, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தியவர்கள், பின்னாளில் வரலாற்றின் குப்பைத் தொட்டிகளில் தூக்கி வீசப்பட்ட உதாரணங்கள் நிறையவே உண்டு என்பதை மத்திய பா.ஜ.க. அரசில் - சி.பி.ஐ அமைப்பை ஏவி விடுவோர் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எத்தனை ஊடகங்களை வளைத்து உண்மைகளை மறைக்கப் பார்த்தாலும், மக்கள் மன்றத்தில் அது அம்பலமாகி விடும். எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கி, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் தனது மூர்க்கப் போக்கை ஒன்றிய பா.ஜ.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், இவற்றைக் கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள், வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள். பாடம் புகட்டும் நீதிபதிகளாக மாறி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வட்டியும் முதலுமாகத் திருப்பி வழங்குவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஓரமா போயி விளையாடுங்க.. குறுக்க வராதிங்கப்பா.! கலாய்த்த சீமான்