ஏழு பேர் விடுதலைக்காக துரும்பை கூட கிள்ளிப் போடாதா திமுக.. ஸ்டாலினை போட்டு தாக்கும் ஜெயகுமார்..!

By vinoth kumarFirst Published Nov 12, 2022, 9:38 AM IST
Highlights

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தி தந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பங்கம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆதாயம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் - பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளே முக்கிய காரணம். 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி. காரணம் தி.மு.க இந்த நேரத்தில், `ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்' என்பதுபோல எங்கே எது நடந்தாலும், அதற்கு நாங்கள்தான் காரணம் என்பது மாதிரி சந்தனத்தைப் பூசிக்கொள்வது. இந்த மாதிரி ஒரு கில்லாடிதனத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி மக்களிடையே தவறான தகவலைப் பரப்பி அதன் மூலம் ஓர் ஆதாயத்தைத் தேடுகிறார்கள். 

இதையும் படிங்க;- 7 பேரின் விடுதலைக்காக ஜெயலலிதா இறுதி மூச்சு வரை போராடியதை யாராலும் மறுக்க முடியாது.. சசிகலா உருக்கம்.!

புரட்சித் தலைவி ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைகளால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என ஜெயக்குமார் கூறியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆதாயம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின். 7 பேர் விடுதலைக்கான வெற்றியை திமுக சொந்தம் கொண்டாட முடியாது. திமுக மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. இதற்கு திமுக எந்தவிதத்திலும் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளி போட்டது கிடையாது என விமர்சித்துள்ளார். 

நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது. பொதுப்பிரிவினரின் 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. 10 சதவீத இடஒதுக்கீட்டில் இரட்டை போடும் திமுகவுக்கு ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக சட்டமன்ற அனைத்து கட்சிகளையும் முதல்வர் துணைக்கு அழைக்கிறார். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து ஆராய 2006ம் ஆண்டு ஒரு கமிஷனை காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு அமைத்தது. 

கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு உருவாக்கியது. திமுக சார்பில் பதவியில் இருந்த மத்திய அமைச்சர்கள் ஒப்புதல் அளித்த சட்டத்தை தான் தற்போதைய அரசு நிறைவேற்றியுள்ளது. காரியம் ஆனதும் காலை வாரும் கொள்கை கொண்ட திமுக தலைமை தற்போது இந்த சட்டத்தை எதிர்ப்பது போல் நடிக்கிறது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது எடுத்து வைக்க வேண்டிய வாதங்களை குறித்து அனைத்து கட்சிகளையும் திமுக கலந்து ஆலோசிக்கவில்லை. தான்தோன்றித்தனமாக வாதிட்டு தற்போது மூக்கறுபட்ட பின் வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு மற்ற கட்சிகளை அழைப்பதை எப்படி ஏற்க முடியும் என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வரின் இரட்டை வேடத்தை புரிந்துகொண்டு காங்கிரசும், கம்யூனிஸ்டும் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது என்றார். 

இதையும் படிங்க;-  இந்த சிக்கல்களுக்கு காரணம் ஆளுநர் தான்.. அவருக்கு கடிவாளம் போட ஐடியா கொடுக்கும் ராமதாஸ்!

மேலும், சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற இந்த திமுகவின் கபட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது. 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பிரச்சனை வந்தபோது அது அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்த்து உறுதிப்படுத்தப்பட்டது. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தி தந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பங்கம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- மத்தியில் பூம் பூம் மாடு போல் தலையாட்டிய திமுக..! இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது- சீறிய ஜெயக்குமார்

click me!