திமுக கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா? காங்கிரஸ் நாளை முக்கிய ஆலோசனை..!

By vinoth kumarFirst Published Mar 3, 2021, 5:37 PM IST
Highlights

திமுக கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து நாளை மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து காங்கிரஸ் ஆலோசனை நடத்த உள்ளனர்.

திமுக கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து நாளை மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து காங்கிரஸ் ஆலோசனை நடத்த உள்ளனர்.

உம்மன் சாண்டி தலைமையில் ஒரு முறையும், கே.எஸ்.அழகிரி தலைமையில் இரண்டு முறையும் காங்கிரஸ் குழு திமுகவை குழுவை சந்தித்து பேசியது. இந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் காங்கிரஸ் கட்சி கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கிய 41 தொகுதிகள் அப்படியே தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்த மூன்று முறையும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெளிவாக திமுக எடுத்துக்கூறியுள்ளது. கூட்டணியில்  அதிக கட்சிகள் உள்ளதாக கூறி காங்கிரசுக்கான தொகுதிகளை கடந்த முறையை காட்டிலும் சரி பாதியாக குறைத்து கொடுக்க திமுக முன்வந்துள்ளது.

ஆனால் வெறும் 21 தொகுதிகளுக்காக கூட்டணியில் தொடர முடியாது என்று காங்கிரஸ் கருதுகிறது. திமுகவின் இந்த நிலைப்பாட்டை ஏற்கனவே காங்கிரஸ் மேலிடத்திடம் தமிழக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கு ராகுல் காந்தி நாம் 41 தொகுதிகளில் உறுதியாக இருப்போம். இடங்கள் குறைந்தால் தேசிய அளவிலும் பல்வேறு மாநிலங்களிலும் அது எதிரொலிக்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிரடியாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், நாளை காலை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்க விரும்புகிறார். இக்கூட்டத்தில் தாங்கள் அவசியம் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மிகக் குறைவான இடங்களே ஒதுக்கப்படுவதால், கூட்டணியில் தொடர்வது பற்றி நாளை காலை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்கச் சொல்லி தினேஷ் குண்டுராவுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படிதான் நாளை தினேஷ் குண்டுராவ் இந்த கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!