தமிழக மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆளுநர்.!பாஜக கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுவதா.? காங்.

By Ajmal Khan  |  First Published Jun 6, 2023, 1:02 PM IST

 ஆளுநரின் செயல்பாடுகள், பேச்சுகள் நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் அரசியலில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவே இருப்பதாக தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுவதையும், தேவையற்றவற்றைப்   பேசுவதையும் ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் வலியுறுத்தியுள்ளார். 


வெளிநாடு பயணம்- ஆளுநர் விமர்சனம்

நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (05.06.2023) உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும் போது, அந்நிய முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளார். இவரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

Tap to resize

Latest Videos

குழந்தை திருமண சர்ச்சை

சமீபத்தில் குழந்தைத் திருமணம் பற்றி பேசிய ஆளுநர் ரவி அவர்கள், தமிழ்நாடு சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கத்தோடு குழந்தைத் திருமணம் குறித்து சிதம்பரம் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்றும், உண்மையில் சிதம்பரத்தில் குழந்தைத் திருமணங்கள் நடக்கவில்லை என்றும் தீட்சிதர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.  ஆனால், தற்போது சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால், மூக்குடைபட்ட நிலையில் உள்ள ஆளுநர், அதை மடைமாற்றம் செய்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு பயணம் பற்றி விமர்சித்துள்ளார். ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனிற்கும் எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

சொகுசு வாழ்க்கை வாழும் ஆளுநர்

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆளுநர் இவ்வாறு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கட்சித்தலைவர் போல செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த நிலை பாஜகவிற்கு எதிர்நிலை கொண்ட கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் தொடர்கிறது. ஆளுநரின் செயல்பாடுகள், பேச்சுகள் நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் அரசியலில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுவதையும், தேவையற்றவற்றைப்   பேசுவதையும் ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆளுநர் பதவிக்கு தகுந்த மாதிரி அவரின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

குழந்தையின் எதிர்கால விஷயம்,தொடர்ந்து பேசினால் நன்றாக இருக்காது.! முற்றுப்புள்ளி வைக்கிறோம்.! மா.சுப்பிரமணியன்
 

click me!