மணிப்பூரில் முதல் முறையாக பாரதிய ஜனதா ஆட்சி? - ‘குதிரை பேரம்’ தொடக்கம்; தடுக்க முயற்சிக்கும் காங்.

First Published Mar 12, 2017, 9:12 PM IST
Highlights
BJP rule in Manipur for the first time? -Horse-trading origins Cong trying to prevent.


மணிப்பூர் மாநிலத்தில் 2-வது பெரிய கட்சியாக உருவாகியுள்ள பாரதிய ஜனதா, முதல் முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில்  தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்காக தேசியவாத மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் ஆதரவைக் பாரதிய ஜனதாக கட்சி கோர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொங்கு சட்டசபை

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ளது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், பாரதிய ஜனதா கட்சிக்கு 21 இடங்களும், கிடைத்துள்ளது.

தேசியவாத மக்கள் கட்சி, நாகா மக்கள்முன்னணி தலா 4 இடங்களிலும், எல்.ஜி.பி., திரிணாமுல் காங்கிரஸ், சுயேட்சை என தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளனர். மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

ஆட்சி?

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள எல்.ஜே.பி. கட்சி, தேசியவாத மக்கள்கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் மணிப்பூரில்முதல்முறையாக ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

பா.ஜ ஆட்சி அமையும்

இது குறித்து பாரதியஜனதா கட்சி சார்பில் முதல்வர் பதவிக்கு வர அதிக வாய்ப்புள்ள என். பிரன் கூறுகையில், “ மணிப்பூரில் பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி அமையும் என உறுதியாக நம்புகிறோம். என்.பி.பி. 4 இடங்களிலும், எல்.ஜே.பி. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.  தனித்தனியாக போட்டியிட்டாலும், நாங்கள் அனைவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். நாங்கள்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடமும், சுயேட்சை எம்.எல்.ஏ.விடமும் பேச்சு நடத்தி ஆதரவு கோருவோம்''  என்றார்.

முதல்முறையாக

கடந்த ஆண்டு அசாமில் யாரும் எதிர்பாரா வகையில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்திபாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்த நிலையில், இப்போது வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தனது தடத்தை பாரதிய ஜனதா பதிக்க இருக்கிறது.

அதே சமயம், கடந்த 2012ம் ஆண்டு தேர்தலில் 42 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி இந்த முறை 28 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையா மக்கள் மத்தியில் பரப்பிய பாரதிய ஜனதா கட்சி, அந்த கட்சியின் முக்கிய தலைவர்களான என். பிரன், ஒய்.எராபாட், ஓ.சவுபா ஆகியோரை தன்பக்கம் இழுத்துக்கொண்டது.

குறைந்தது

காங்கிரஸ் கட்சியின் ஓட்டுசதவீதமும் கடந்த 2012ம் ஆண்டில் 45சதவீதம் இருந்த நிலையில், இந்த முறை 35 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நாங்களும் அமைப்போம்

இது குறித்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.என். ஹாகிப் கூறுகையில், “பாரதிய ஜனதா கட்சியின் பொய்யான வாக்குறுதியும், தீவிரவாத இயக்கமான என்.எஸ்.சி.என்.(ஐ.எம்) ஆகியவற்றின் ஆதிக்கமும்தான் தேர்தலில் சற்று பின்னடைவுக்கு காரணம். இதனால்தான் பாரதிய ஜனதா கட்சியும், என்.பி.எப். கட்சியும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

மாநிலத்தில் நிலவும் பொருளாதார மந்தநிலையை விலக்குவதாக பா.ஜனதாவின் பொய்யான வாக்குறுதியும், பண பலமும் எங்களுக்கு பாதகமாக அமைந்தன. இருப்பினும் அடுத்த ஆட்சியை நாங்கள் அமைப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது இது தொடர்பாக எங்களோடு ஒத்த மனநிலையில் இருக்கும் கட்சிகளுடன் பேசி வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.

click me!