எங்களை எதிர்த்தால் தினகரன் நிலைதான்... தமிழக அரசியல் கட்சிகளுக்கு பாஜக மறைமுக எச்சரிக்கை!

First Published Apr 17, 2017, 1:40 PM IST
Highlights
BJP Phantom Warns To Tamilnadu Political parties


சசிகலாவின் கடந்த கால அரசியல் தொடங்கி, கூவத்தூர் விவகாரம் வரை அவரது குடும்பம் மற்றும் உறவுகள் மீது தமிழக மக்களுக்கு, ஒரு வெறுப்பு இருப்பது உண்மைதான்.

ஆனாலும் ஜெயலலிதா இறந்த பிறகு, கட்சியும், ஆட்சியும் பறிபோய்விடக் கூடாது என்ற அச்சம், கட்சியில் உள்ள மற்றவர்களை விட அவருக்கு கூடுதலாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுடன் பெங்களூரு சிறையில் இருந்த போதே, தற்காலிக முதல்வராக இருந்த பன்னீர், அவர்கள் திருப்ப வருவதற்கு வாய்ப்பில்லை என்று, கட்சி, ஆட்சி ஆகிய இரண்டையும் கைப்பற்ற திட்டம் வகுத்து செயல்படுத்த ஆரம்பித்தார் என்று அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த நிலையில், பெங்களூரு சிறையில் இருந்து திரும்பி வந்த ஜெயலலிதா, ஓ.பி.எஸ்ஸை ஓரம் கட்ட தொடங்கி விட்டார். அவரது ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் பன்னீரும், அவரது ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதனும் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்ற பேச்சு எழுந்தது. ஸ்டாலினும் அதை வெளிப்படையாகவே பேசினார்.

பின்னர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், முதல்வரின் பொறுப்புக்கள் பன்னீரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவர் இறந்ததும், தமது விசுவாசியாக அப்போது அறியப்பட்ட எடப்பாடியையே முதல்வராக்க விரும்பினார் சசிகலா. ஆனால், பாஜக நெருக்கடி காரணமாக பன்னீரே திரும்பவும் முதல்வர் ஆக்கப்பட்டார்.

ஆனாலும், பாஜக மேலிடத்தில் பன்னீருக்கு உள்ள நெருக்கம், தமக்கு ஆபத்து என்பதை உணர்ந்த சசிகலா, தாமே முதல்வராக வேண்டுமென நினைத்தார்.

பன்னீரிடம் ராஜினாமா பெறப்பட்டது. அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் மவுன அஞ்சலி செலுத்தி சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி பிடிக்க ஆரம்பித்தார்.

சசிகலாவின் மீது மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இருந்த வெறுப்பு பன்னீரின் செல்வாக்கை உயர்த்தியது.

நிலைமை கைமீறி போவதை உணர்ந்த சசிகலா தரப்பு, கூவத்தூர் கூத்துக்களை அரங்கேற்றி, ஆட்சியை கைப்பற்றியது. சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேர்ந்ததால், எடப்பாடி, முதல்வரானார்.

எடப்பாடியும், பன்னீரைப்போல ஆகிவிடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் செயல்பட ஆரம்பித்தார், கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன்.

ஆனால், எடப்பாடியோ, பன்னீரை போல பவ்யம் காட்டாமல், கட்சியை விட்டும் வெளியேறாமல், தமக்கென எம்.எல்.ஏ க்கள் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு, தினகரனையே ஓரம் கட்டும் முயற்சியில் இறங்கி விட்டார்.

அவருக்கு பன்னீர் மற்றும் பாஜ மேலிடம் என இரு தரப்பும் ஆதரவு கரம் நீட்ட ஆரம்பித்தன. குறிப்பாக சசிகலா குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தையும் அகற்ற முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பாகவே, பல எதிர்ப்புகளையும் மீறி, குடும்ப உறவுகளின் குறுக்கீடு கட்சியிலும், ஆட்சியிலும் இல்லாமல் செய்து விட்டார் தினகரன். 

எந்த அமைச்சரையும் நீக்கவில்லை, தம்முடைய ஆதரவாளர் என்று அவர் யாரையும் அமைச்சரவையில் திணிக்கவில்லை. கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்த வேண்டும் என்றே அவர் நினைத்தார்.

ஆனாலும், தினகரனின் தலையீடு என்பது கொஞ்சம் கூட இருக்கக் கூடாது என்பதையே விரும்பினார் எடப்பாடி. ஒரு கட்டத்தில், தினகரன் சொல்வது எதையுமே கேட்கவில்லை அவர்.

இதனால் வெறுத்துப்போன தினகரன், ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் கைப்பற்றினால் மட்டுமே திறம்பட செயல்பட முடியும் என்று முடிவுக்கு வந்தார்.

வெற்றி என்பதையே குறிக்கோளாக கொண்டு செயல் பட்ட அவர், பணத்தை  வாரி இறைத்து, வெற்றியின் விளிம்புக்கும் வந்து விட்டார்.

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றால், தமது முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று நினைத்த எடப்பாடி, சொல்ல வேண்டியதை சொல்லி, நடத்த வேண்டியதை நடத்தினார்.

ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. அடுத்து, கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கிய தினகரன், பத்திரத்தில் கையெழுத்து வேட்டையை தொடங்கினார்.

இது இன்னும் சிக்கலை உருவாக்கும் என்று நினைத்த எடப்பாடி, பாஜக மேலிடத்தின் வழிகாட்டுதலோடு, தினகரனை கட்சியில் இருந்து வெளியேற்றி, அதிமுகவின் இரு அணிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.

இதை அறிந்து, கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார் தினகரன். இந்நிலையில், கட்சி சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக கட்சி பெயர், சின்னம் குறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் நிலையில், தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை கணக்கில் கொண்டு பார்க்கும் பொது... எங்கேயோ..ஏதோ இடிக்கிறதே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

click me!