ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு ஆண்ட அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுத்து எங்களுடைய தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள். மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
பாஜக- அதிமுக மோதல்
தமிழகத்தில் பாஜக அதிமுக இடையே வார்த்தை போர் அதிகரித்து வரும் நிலையில், பாஜக மதுரை மாநகர் தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும், தேசபக்தி நிறைந்த பொது மக்கள் இதயத்திலும் அதிக நன் மதிப்பை எங்கள் மாநில தலைவர் திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் பெற்று உள்ளதை உலகம் அறியும்.
ஆனால் தங்கள் இயக்கத்தின் இரண்டாம் கட்டதலைவர்கள் திரு.செல்லூர் ராஜ், திரு ஜெயக்குமார் உள்பட சிலர் எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வருவதை எங்கள் மனதை புண் படுத்தி உள்ளது. தங்களுடைய இயக்க தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மிகுந்த மரியாதை வைத்து உள்ளனர்.
அதிமுக வெற்றிக்கு பாஜகவே காரணம்
ஆனால் தங்கள் இயக்கத்தின் தலைவர்கள் புரட்சி தலைவி ஜெயலலிதா போன்று தங்களை நினைத்து கொண்டு நான்கு, ஐந்து அணிகளாக அதிமுக பிளவு பட்டதை மறந்து எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வருவதை எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. தற்போது ஆளும் கட்சியான திமுக தொடர் ஊழல், வாரிசு அரசியலால் மக்கள் செல்வாக்கை இழந்து 15% குறைவான வாக்கு வங்கியை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு பணம் கொடுத்து குண்டர்களை வைத்து மிரட்டி பொதுக்கூட்டத்துக்கு அழைத்து வருவதை தமிழத மக்கள் அறிவார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தங்களுடைய" தோழமை இயக்கம் என்ற பரிவுடன் மீண்டும் அதிமுகவை ஒன்றிணைத்து சட்டசபையில் 66 எம்எல்ஏக்களை இடம் பெற வைத்ததை தாங்கள் நன்றி மறந்து விட்டீர்கள்.
தனித்து போட்டியிட தயாரா.?
இனிவரும் காலங்களில் திமுக. அதிமுக கட்சிகள் கூட்டணியின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17% சதவீத வாக்கு வங்கிகளை கடந்து செல்கின்ற பாஜகவுடன் போட்டியிட தயாரா? நாங்கள் தேர்தல் களத்தில் பணிபுரிபவர்கள். உங்களுடைய பலமும், பலவீனமும் எங்களுக்கு தெரியும். ஆளும்கட்சி செய்கின்ற ஊழல்களை கண்டறிந்து DMK File 1 & DMK File 2 என்று நடவடிக்கை எடுத்து ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு ஆண்ட அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுத்து எங்களுடைய தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள். மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.
முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்
பாஜக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதால் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் 10 மாநகராட்சி மேயர் பதவியை தாங்கள் இழந்ததை மறந்து விட வேண்டாம் என்பதை நினைவு படுத்துகிறோம். புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் மற்றும் இரட்டை இலை சின்னத்தின் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் மரியாதையின் காரணமாக அமைதி காக்கின்றோம். எங்களுக்கு மடியில் கனம் இல்லை என்பதால் வழியில் பயமில்லை. இனிவருகின்ற காலங்களில் உங்கள் இயக்க தலைவர்கள் எங்கள் தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை அள்ளி வீசினால் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீதான ஊழலை பொதுமக்கள் மத்தியில் எடுத்து உரைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்