மண்ணுக்கு துரோகம் செய்த எட்டப்பன்.. துரோக வரலாற்றின் கூடாரமே திமுக தான்! பன்னீருக்கு ஜி.கே.மணி பதிலடி..!

By vinoth kumar  |  First Published Aug 9, 2023, 7:07 AM IST

கடலூர் மாவட்டத்தில் எம்.ஆர் கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் இருந்தார். அவர் எந்த அரசு பதவியிலும் இல்லை, ஆனால் உழவர்களின் நலனுக்காக போராடி வென்று கொடுத்தார். அதனால்தான் அவருக்கு வேங்கை என்று பெயர். அவரது புதல்வர்தான் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவர் வேளாண்துறை அமைச்சராக இருக்கிறார். 


என்எல்சியை வெளியேற்றி மண்ணையும் மக்களையும் காப்பது தான் பாமகவின் நோக்கம். மாறாக என்எல்சி விவகாரத்தில் இதுவரை இழைக்கப்பட்ட அனைத்து துரோகங்களுக்கும் திமுக தான் காரணம் என அமைச்சர் எம்.ஆர்.கே.  பன்னீர்செல்வத்துக்கு ஜி.கே.மணி பதிலடி கொடுத்துள்ளார். 

என்எல்சி விவகாரத்தில் சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத் துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா? என அமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஜி.கே.மணி பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சென்னையில் வீராவேசம்.. டெல்லியில் பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்? அன்புமணியை அலறவிடும் அமைச்சர்.!

 

இது தொடர்பாக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- என்எல்சி விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பதிலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காது ஏன்? என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வினா எழுப்பியிருக்கிறார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் திமுகவின் துரோகம் அவரது அறிக்கை வாயிலாகவே அம்பலப்பட்டிருக்கின்றது.தமிழகத்தின் மிக முக்கியத்துறையான வேளாண் துறையின் அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு வேளாண் துறை மீதும் உழவர் நலனிலும் தான் அக்கறை இல்லை என்று பார்த்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பொது விவகாரங்கள் குறித்த அடிப்படை பார்வை கூட இல்லை என்பது இப்போதுதான் தெரிகிறது. நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் தெரிவிக்கப்படும் பதில்களுக்கும், அவை நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உறுப்பினர்களின் வினாக்களுக்கு மத்திய அமைச்சர்கள் எழுத்து மூலம் அளிக்கும் பதில்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படாது. மாறாக உறுப்பினர்களின் இணைய பக்கத்திலும் நாடாளுமன்ற அவைகளின் இணையதளங்களிலும்தான் வெளியிடப்படும். அவற்றின் மீது எந்த எதிர் வினாவும் எழுப்ப முடியாது, விவாதமும் நடத்த முடியாது. தமிழகத்தின் அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு இது கூட தெரியாதது பரிதாபம்தான்.

அடுத்ததாக தமிழகத்தில் என்எல்சி சுரங்கத் திட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அமைச்சர் கூறுவதற்கான துணிச்சலை வழங்கியது தமிழகத்தை ஆளும் திமுக அரசுதான். தமிழ்நாட்டில் 64,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை உரிமம் 1956 ஆம் ஆண்டிலிருந்து என்எல்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது, இந்த உரிமம் வரும் 2036 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்எல்சிக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துவிட்டால் அதன்பின் என்எல்சி தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது. அதை செய்யும் அதிகாரம் திமுக அரசுக்கு இருக்கும் நிலையில் அந்த அதிகாரத்தை செயல்படுத்தாமல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை பன்னீர்செல்வம் கேள்வி கேட்பதே அவரது கையாலாகாத தனத்தைத்தான் காட்டுகிறது. திமுக அரசின் தோல்வியையும் துரோகத்தையும் மூடி மறைப்பதற்காக அன்புமணி ராமதாஸ் மீது பன்னீர்செல்வம் பழி போட முயல்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

 

பாஐக அரசின் அனைத்து கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் எதிர்க்கும் திமுக என்எல்சி விவகாரத்தில் மட்டும் பாஜகவின் நிலைப்பாட்டை முழைமையாக ஆதரிக்கிறது. இந்த மர்மத்தைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழகத்தின் உழவர்கள் நலன் காக்கவும், என்எல்சி நிறுவனத்தின் அநீதிக்கு எதிராக கடலூர் மாவட்ட உழவர்களை காப்பதற்காகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர் அன்புமணி ராமதாஸ் மட்டும்தான். என்எல்சி விவகாரம் குறித்து மட்டும் அவர் கடந்த நான்காண்டுகளில் மொத்தம் 30-க்கும் மேற்பட்ட வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளையும் பெற்றிருக்கிறார். அதன் பயனாகத்தான் என்எல்சியால் கடலூர் மாவட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் சுரங்கம் அமைக்க குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்பன போன்ற உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பதில்கள்தான் என்எல்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு உத்வேகத்தை தந்திருக்கின்றன.திமுக சார்பில் மக்களவையில் 24 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவராவது என்எல்சி விவகாரம் குறித்தும், உழவர்கள் நலன் குறித்தும், நாடாளுமன்றத்தில் வினா எழுப்பி உள்ளார்களா? என்எல்சி நிறுவனத்திடமிருந்து உழவர்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவுக்கும், எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கும் அன்புமணி ராமதாஸ் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை.

கடலூர் மாவட்டத்தில் வீராணம் நிலக்கரி திட்டம். பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம், சேத்தியாதோப்பு நிலக்கரி திட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம் ஆகியவற்றை முதன் முதலில் வெளி உலகுக்கு தெரிவித்தவர் அன்புமணி ராமதாஸ்தான். அப்போது அரசாங்கம் எங்களிடம் உள்ளது, காவல்துறை எங்களிடம் உள்ளது, எங்களுக்கே தெரியாமல் நிலக்கரி திட்டம் வந்துவிடுமா? என்று கேட்டது இதே பன்னீர்செல்வத்தின் வாய்தான். பின்னர் பாமகவின் எதிர்ப்பால் மூன்று நிலக்கரி திட்டங்கள் கைவிடப்பட்டவுடன் நாங்கள் கடிதம் எழுதியதால்தான் இத்திட்டங்கள் கைவிடப்பட்டன என்று வெற்று பெருமை பேசியதும் திமுகவின் வாய்தான். இப்படியாக தங்களின் தோல்விகளை தட்டிக் கழிப்பதும், அடுத்தவர் வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுவதும் திமுகவின் டிஎன்ஏவில் ஊறியவை.

தமிழகத்தில் எந்த ஒரு புதிய நிலக்கரி சுரங்கங்களையும் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் உத்தரவாதம் அளித்தவர் பன்னீர்செல்வத்தின் முதல்வரான மு.க.ஸ்டாலின் தான். ஆனால் நெய்வேலியில் மூன்றாவது சுரங்கத்துக்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என இதே மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்தில் எனது வினாவுக்கு விடை அளித்திருந்தார். அது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிப்பார், மூன்றாவது சுரங்கத்தை தமிழக அரசு அனுமதிக்காது என்று உறுதி அளிப்பார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அது குறித்து முதல்வர் எதுவும் பேசவில்லை, அமைச்சர் பன்னீர்செல்வமும் எதுவும் பேசவில்லை. இந்த அமைதிக்கு பின்னால் எந்த அமலாக்கத்துறை இருக்கிறது.

இதையும் படிங்க;- இப்படி இருந்த எப்படி சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும்? தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாக பிரியுங்கள்.. ராமதாஸ்.!

கடலூர் மாவட்டத்தில் எம்.ஆர் கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் இருந்தார். அவர் எந்த அரசு பதவியிலும் இல்லை, ஆனால் உழவர்களின் நலனுக்காக போராடி வென்று கொடுத்தார். அதனால்தான் அவருக்கு வேங்கை என்று பெயர். அவரது புதல்வர்தான் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவர் வேளாண்துறை அமைச்சராக இருக்கிறார். அதற்குரிய அதிகாரத்தைக் கொண்டு உழவர்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்யலாம். ஆனால் அவர் உழவர்களுக்கு செய்தது துரோகம் மட்டும்தான். இப்போது கூட நெய்வேலியில் உழவர் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டபோது அதை தடுக்காமல் கனடாவுக்கு உல்லாச பயணம் சென்றவர்தான் பன்னீர்செல்வம். அவர் வேங்கையின் மைந்தனாக இருப்பார் என்று தான் எதிர்பார்த்தோம், ஆனால் விட்டத்துப் பூனையாக இருக்கின்றார். துரோகங்களுக்கு துணை போகிறார். இதை கடலூர் மாவட்ட மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

உழவர்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு என்எல்சி ஆதரவாக எம்ஆர்கே பன்னீர்செல்வம் செயல்படுவதற்கு வலிமையான காரணங்கள் உள்ளன. என்எல்சி நிறுவனத்தில் இருந்து திமுகவை சேர்ந்த அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கடந்த பல பத்தாண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. அதை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தால் மறுக்க முடியுமா? அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர் அன்புமணி ராமதாஸ். அவர் கொண்டு வந்த 108 அவசர ஊதி திட்டம் தான் இதுவரை லட்சக்கணக்கான உயிர்களை காத்திருக்கிறது. அவர் அறிமுகம் செய்த தேசிய ஊரக சுகாதாரத் இயக்கம்தான் தாய் சேய் இறப்பு வீகிதத்தை 60% வரை குறைத்திருக்கிறது. புகையிலைக்கு எதிராகவும், மதுவுக்கு எதிராகவும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஈடு இணையற்றவை. அதிகாரத்தில் இல்லாத போதும் மக்களை காப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தை நடத்தி திமுக அரசையே சட்டம் கொண்டு வர செய்தவர் அன்புமணி ராமதாஸ். அவரைப் பற்றி பேச பன்னீர்செல்வத்துக்கு தகுதி இல்லை.

 

என்எல்சி விவகாரத்தில் உழவர்களின் உரிமைகளைக் காப்பதற்காக பாமக தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே போராடிக்கொண்டிருப்பவர் மருத்துவர் ராமதாஸ்தான். பாமக தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை எண்ணற்ற போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பயனாகத்தான் என்எல்சி எடுத்த நிலங்களுக்கான விலை ஏக்கருக்கு சில ஆயிரங்கள் என்ற நிலையிலிருந்து ரூபாய் 25 லட்சம் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் இதை சாதனையாக சொல்லிக்கொள்ள பாமக தயாராக இல்லை. என்எல்சியை வெளியேற்றி மண்ணையும் மக்களையும் காப்பது தான் பாமகவின் நோக்கம். மாறாக என்எல்சி விவகாரத்தில் இதுவரை இழைக்கப்பட்ட அனைத்து துரோகங்களுக்கும் திமுக தான் காரணம்.

இப்போதும் எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது இந்த அறிக்கையை எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கமாட்டார், அவரது பெயரில் அவரது கட்சி தலைமையே எழுதி வெளியிட்டிருக்கும் என்பது தான் அந்த ஐயம். அந்த ஐயத்தை போக்க எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு அற்புதமான வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் எந்த புதிய நிலக்கரி திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதி இன்றும் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் மூன்றாவது சரங்கத்துக்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது.

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் என்ற முறையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து “சட்டப்பேரவையில் நீங்கள் அறிவித்தவாறு என்எல்சி மூன்றாவது சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட மக்களுடன் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்துவேன்” என்று உறுதிபடகூற வேண்டும். அவ்வாறு கூறினால் அவரை மண்ணைக் காக்க வந்த வீரபாண்டிய கட்டபொம்மனாக கடலூர் மாவட்ட மக்கள் போற்றுவார்கள். இல்லாவிட்டால் மண்ணுக்கு துரோகம் செய்த எட்டப்பனாகத்தான் வரலாற்றில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இடம் பெறுவார். இது உறுதி என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.

click me!