ஏசியாநெட் நியூஸ் இரண்டாவது முறையாக தேர்தலுக்கு முந்தைய இறுதிக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. 30,000 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கர்நாடகாவில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜன் கி பாத்துடன் இணைந்து ஏசியாநெட் நியூஸ் இரண்டாவது முறையாக தேர்தலுக்கு முந்தைய இறுதிக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. 30,000 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதற்கான பணியில் களப்பணியாளர்கள், டேட்டா அனலிஸ்ட், சர்வேயர் என 70 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். கர்நாடகாவின் ஆறு மண்டல வாரியாக இந்தக் கருத்தக்கணிப்பு நடைபெற்றது.
முன்னதாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பும் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. தற்போது, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னரும் தேர்தலுக்கு முந்தைய இரண்டாவது கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.
துல்லியமான கணிப்பு:
இதுவரை ஜன் கி பாத்துடன் இணைந்து ஏசியாநெட் நியூஸ் 36 தேர்தல்கள் குறித்த கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 2018ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளிலும், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளிலும் ஏசியாநெட் நியூஸ் மற்றும் ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு முடிவுகள் துல்லியமாக பிரதிபலித்தன.
கர்நாடகா மாநிலத்தில் இரண்டு பெரிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பல தொகுதிகளில் நேருக்கு நேராக கடுமையான போட்டி நிலவும் சூழல் உள்ளது. மற்றொரு முக்கிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் மும்மரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் அண்மையில் வெளியாகியுள்ளதால், அதில் உள்ள அறிவிப்புகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடக தேர்தல்.. ஜன் கி பாத் - ஏசியாநெட் மெகா கருத்துக்கணிப்பு.. மண்டல வாரியான முடிவுகள் இதோ..
பிரதமர் மோடி:
பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களிலும் ரோடு ஷோவிலும் கலந்துகொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது கர்நாடகாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது என்றும் காங்கிரஸ் காலவதியாகிவிட்ட கட்சி என்றும் கடுமையாக விமர்சித்துப் பேசிவருகிறார். பிரதமர் மோடி செல்லும் இடங்களில் ஏராளமான மக்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.
பாஜக பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஒரு அமைப்பை தடை செய்தது போல, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பஜ்ரங் தளம் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது தேர்தல் களத்தில் முக்கிய பேசுப்பொருளாக மாறியுள்ளது. பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக அறிவித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ள பாஜகவைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அந்த தடை செய்யப்பட்ட அமைப்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கை போல உள்ளதாவும், இஸ்லாமிய அடிப்படைவாத நோக்கில் முஸ்லிம்களை திருப்திபடுத்த இவ்வாறு அறிவித்துள்ளதாவும் சாடி இருந்தார்.
ஜெய் அனுமான்:
பஜ்ரங் தளம் என்பது அனுமார் பக்தர்களால் நடத்தப்படும் அமைப்பு. இதனைத் தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை பாஜக தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறது. பிரதமர் மோடியும் இதனை முக்கிய ஆயுதமாக கையில் எடுத்து பேசியுள்ளார். புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஓட்டுப் போடும்போது ஜெய் அனுமான் என்று சொல்லிக்கொண்டே வாக்கு செலுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
ஜன் கி பாத் - ஏசியாநெட் மெகா சர்வே: கர்நாடகா தேர்தல் களம் மாறுகிறதா? பாஜகவுக்கு கைகொடுக்கும் 2 மண்டலங்கள்!!
இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) கர்நாடக மாநிலம் முழுவதும் ஹனுமன் சாலிசா எனப்படும் அனுமார் பாட்டு ஒலிக்கும் என பாஜக அறிவித்துள்ளது. கர்நாடக மக்களின் ஆதரவையும் கோரியுள்ள பாஜக, அனைவரின் வீட்டிலும் இரவு 7 மணிக்கு அனுமார் பாட்டை ஒலிக்க வைக்க அழைப்பு விடுத்துள்ளது. விஜய்நகர் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பினர் ஹனுமன் சாலிசா பாடலைப் பாடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளனர்.
இதுபோன்ற பாஜகவின் முன்னெடுப்புகள் தேர்தல் நேரத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரலாம் என்று கருதப்படுகிறது. பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரமும் இரண்டாவது கருத்துக்கணிப்பில் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில், ஜான் கி பாத் கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கருத்துக் கணிப்பை நடத்தி இருந்தது. அப்போது, வெளியான கருத்துக் கணிப்பில் பாஜக 102 முதல் 108 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 72 முதல் 74 இடங்களை கைப்பற்றும் என்றும், ஜேடிஎஸ் 42 முதல் 44 இடங்களைப் பெறும் என்றும், மற்றவர்கள் 2 முதல் 4 இடங்களைப் பெறுவார்கள் என்றும் வெளியாகி இருந்தது. சற்றேக்குறைய இந்த கணிப்பு சரியாகவே இருந்தது. அப்போதைய தேர்தல் முடிவில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜேடிஎஸ் 37 இடங்களிலும், மற்றவர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.