பாஜக நிர்வாகியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்
மல்யுத்த வீரர்கள் போராட்டம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக்கூறி மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், நேற்று இரவு போராட்டத்தின் போது குடிபோதையில் டெல்லி போலீஸ் சீருடையில் வந்த சிலர் தங்களை தாக்கியதாகவும், குறிப்பாக மல்யுத்த வீராங்கனைகளை அடித்து துன்புறுத்தியதாகவும் மல்யுத்த வீரர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வன்முறையில் இருவர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும்கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்த ட்விட்டர் பதிவில்,
இதுதான் பாஜகவின் அடையாளம்
தங்கள் சாதனைகளால் நாட்டிற்கே பெருமை தேடித் தந்த நமது மற்போர் வீரர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பெரும் அநீதியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.பெண்களுக்கு அதிகாரமளிப்பதைப் பற்றி நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறார். ஆனால் அவரது பொய் வாக்குறுதிகளுக்கு முரணாக, கத்துவா, உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு எனப் பல வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தொல்லையளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரைப் பாதுகாப்பதுமே பா.ஜ.க.வின் அடையாளமாக இருக்கிறது. நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்! என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.