உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவை என தெரிவித்துள்ள அண்ணாமலை, இதற்காக உதயநிதியிடம் மன்னிப்பு கேட்க முடியாது என கூறியுள்ளார்.
திமுக சொத்து பட்டியல்
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டியிருக்ககும் வாட்ச் தொடர்பாக திமுக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தனது வாட்ச் மற்றும் திமுகவினரின் சொத்து பட்டியலை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடுவதாக கூறியிருந்தார். அதே போல தனது வாட்சை கோவையை சேர்ந்த தனது நண்பர் ஒருவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து திமுக நிர்வாகிகளான ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219.37 கோடி, எ.வ.வேலுவுக்கு ரூ.5,552.39 கோடி, கே.என்.நேருவுக்கு ரூ.2,495.14 கோடி, கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதி மாறனுக்கு ரூ.12,450 கோடி,
நிபந்தனையற்ற மன்னிப்பு
என திமுக நிர்வாகிகளின் 17 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என திமுக பைல்ஸ் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டிருந்தார்.இதற்கு கண்டம் தெரிவித்த திமுக நிர்வாகிகள் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எனது சொத்து மதிப்பு ரூ.2039 கோடி என்று அண்ணாமலை வெளியிட்டிருந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. என் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். மேலும், அண்ணாமலையின் பேஸ்ஃபுக் மற்றும் என் மக்கள்.காம் என்ற இணையதளத்தில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்க வேண்டும். மேலும், அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பாக என்மீது குற்றம் சுமத்தியதற்காக மன்னிப்பு கோர வேண்டும்.
50 கோடி இழப்பீடு - உதயநிதி நோட்டீஸ்
மன்னிப்புக் கேட்கத் தவறினால், ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்படும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக் அண்ணாமலை சார்பாக பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உதயநிதி குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட நோட்டீஸ் அண்ணாமலையின் குரலை அடக்கும் முயற்சி என கூறப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்க முடியாது
எனவே உதயநிதி ஸ்டாலினிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மாட்டார் என்றும் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்துவதற்காக இந்த ஆவணங்களை வெளியிடவில்லை எனக் கூறியிருக்கும் அண்ணாமலை, திமுகவினரின் முறைகேடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவற்றை வெளியிட்டதாகவும் அந்த பதில் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
பிடிஆர் பதிலை திமுக ஐடி விங்கை தவிர யாரும் நம்பமாட்டார்கள்: அண்ணாமலை