பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணத்தின் துவக்க விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடை பயணத்தை தொடங்கும் அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில், தமிழகத்தில் வெற்றி பெற வேண்டி பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இந்தநிலையில் ஊழலுக்கு எதிராக என் மண் என் மக்கள் எனும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்தில் துவங்கும் நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்கவுள்ளார். நடைப்பயண துவக்க விழாவில் பங்கேற்க வருமாறு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
நடை பயணத்தில் பங்கேற்கும் அதிமுக
இந்நிலையில் நடைப்பயண துவக்க விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி நடைபயண தொடக்கவிழாவில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமைக்கும், பாஜகவிற்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் காரணமாக அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிருப்தியில் உள்ளது. மேலும் நடை பயணம் மூலம் அண்ணாமலை தனது கட்சி மற்றும் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கை முன்னிலைப்படுத்தவே நடை பயணம் செல்ல இருப்பதாக அதிமுக கருதுகிறது. எனவே தான் நடைபயணத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.
நடை பயணத்தில் புகார் பெட்டி
ராமேஸ்வரத்தில் இன்று நடை பயணத்தை தொடங்கும் அண்ணாமலை ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி என ஒவ்வொரு பகுதியான நடை பயணம் மேற்கொள்கிறார். இறுதியாக சென்னையில் ஜனவரி 11ஆம் தேதி தனது 6 மாத கால நடை பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த நடை பயணத்தின் போது முடியல, விடியல என்ற தலைப்பில் புகார் பெட்டியில் வைக்கப்படவுள்ளது. இந்த புகார் பெட்டியில் பொதுமக்களின் கோரிக்கைகள், திமுக அரசு மீதான புகார்களை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டி! டிடிவி தினகரன் அறிவிப்பு