பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை விமர்சிக்கும் வகையில், கிளம்பு, கிளம்பு, அந்து போச்சு என பாஜகவினர் போஸ்டர் ஒட்டி கிண்டல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக- பாஜக மோதல்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் பணியை பாஜக தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அதிமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதா தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜகவுடன் கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்தது.
அண்ணாமலையை நீக்கிடுங்க
இதனையடுத்து இரண்டு தரப்பிலும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பாஜக மாநில தலைவரை மாற்ற வேண்டும் என கோரிக்கையை அதிமுக தரப்பு வைத்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து டெல்லி சென்ற அதிமுக நிர்வாகிகள் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர். அதிமுக- பாஜகவினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டால் தொண்டர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் வாக்குகள் கிடைக்காத நிலை உருவாகும் என கூறப்பட்டது. ஆனால் பாஜக மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தலைவரு நிரந்தரம்!!
இதனையடுத்து அதிமுகவை கிண்டல் செய்யும் வகையில், பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு சார்பாக பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், கிளம்பு.! கிளம்பு !! அந்து போச்சு கிளம்பு ! கிளம்பு !! அலப்பற கிப்புறோம்! தலைவரு நிரந்தரம் என்ற வாசகம் இடம்பெற்றது. இதனால் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
3வது முறை பாஜக ஆட்சி? அதிமுக கதி! இளைஞர்கள் பக்கோடா விற்கணுமா? முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு