தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரியாமல், சிறுகுறு நடுத்தர தொழில்முனைவோர்கள் தமிழக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
டாலர் சிட்டி, இப்போ டல் சிட்டி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த படியூரில் மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் திருப்பூர், கோவை நகரங்கள் நசிந்துவிட்டன. டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், டல் சிட்டியாக மாறிவிட்டது. தன்னுடைய ஆட்சியின் சாதனை என சொல்வதற்கு பிரதமர் மோடியிடம் எதுவும் இல்லாத காரணத்தால், மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து கணக்கு காட்ட பார்க்கிறார் என விமர்சித்திருந்தார்.
மின் கட்டண உயர்வு
இந்தநிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது கடுமையான மின்கட்டணச் சுமை ஏற்றிவிட்டு, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து, டாலர் சிட்டி, டல் சிட்டி என்று வழக்கம்போல ஒப்பித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சிறையில் இருக்கும் சாராய அமைச்சர் ஆரம்பித்து வைத்த மின்கட்டண உயர்வு, தற்போது 15% முதல் 50% கட்டண உயர்வு, நிலைக்கட்டணத்துக்கு 430 சதவீதம் உயர்வு, காலை, மாலையில் பீக் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய 6 மணியிலிருந்து 10 மணிவரை உபயோகிக்கும் மின்சாரத்துக்கு, 15 சதவீதம் கட்டண உயர்வு என, தொழில்முனைவோர்கள் வயிற்றில் அடித்துவிட்டு, எதுகை மோனையாக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர்?
தொழிலாளர்கள் போராட்டம்
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரியாமல், நாளைய தினம் சிறுகுறு நடுத்தர தொழில்முனைவோர்கள் தமிழக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர். நாட்டு நடப்பை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்
3வது முறை பாஜக ஆட்சி? அதிமுக கதி! இளைஞர்கள் பக்கோடா விற்கணுமா? முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு