வருமானவரித்துறை சோதனை உள்ளிட்ட பூச்சாண்டித்தனத்துக்கு அஞ்சும் பழக்கம் எங்கள் இயக்கத்திற்கு கிடையாது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள்
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாளையொட்டி சென்னை, போயஸ்கார்டனில் உள்ள அவரது நினைவில்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிவந்தி ஆதித்தனார் பழகுவதற்கும், நட்பிற்கும் இலக்கணம். ஈகை குணம் கொண்ட சிறந்த பண்பாளர். தந்தை ஆதித்தனார் விட்டுச்சென்ற பணிகளை குறிப்பாக பட்டித்தொட்டியெல்லாம் தினத்தந்தி சென்று சேர காரணமாக இருந்தவர். நாட்டுப்புற விளையாட்டுகள் அழிந்துவிடக்கூடாது என புத்துணர்ச்சி அளித்து ஊக்கப்படுத்தியவர் சிவந்தி ஆதித்தனார்.
பாஜகவுடன் கூட்டணி முறிந்தது
இதனை தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி இல்லயென்ற நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர், பாஜக, அதிமுக உடன் கூட்டணியில் இல்லை என கடந்த 18 ஆம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த நிலைப்பாடு தற்போதும் தொடர்வதாக தெரிவித்தார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பான கேள்விக்கு, நாளைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் உள்ள சூழலில் தற்போது அது பற்றி கூறுவது சரியாக இருக்காது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னவென நாளை தெரியவரும். அதுவரை காத்திருக்கவும் என தெரிவித்தார்.
வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் பயப்பட மாட்டோம்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தது குறித்த கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக நிலை குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச கூடாதா? என்று கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து தங்களுக்கு நெருக்கமானவர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், மடியில் கனமில்லை அதனால் பயமில்லை. பூச்சாண்டிகளுக்கு பயப்படும் இயக்கம் அதிமுக இல்லை. எத்தனையோ சோதனைகளை கடந்து வந்த இயக்கம் அதிமுக. வருமான வரித்துறை சோதனை போன்ற எந்த வித பூச்சாண்டித்தனமும் எங்களை அச்சுறுத்த முடியாது. எங்களது கடமையில் இருந்து என்றும் நாங்கள் பின்வாங்கியது இல்லை. எந்த ஒரு பூச்சாண்டிக்கும் நாங்கள் அஞ்ச போவதில்லை என தெரிவித்தார்.