அனந்த் - ராதிகாவின் திருமணத்தை முன்னிட்டு, ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பிரம்மாண்ட விழாவை நடத்த அம்பானி குடும்பம் முடிவு செய்துள்ளது. அந்த திருமண நடைபெற இருந்த இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழும தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வை கடந்த மார்ச் மாதம் முதலே அம்பானி குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, அனந்த் அம்பானியின் முதல் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி மார்ச் மாதம் குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கடந்த மாத இறுதியில் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் 2-வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் இத்தாலியில் ஒரு சொகுசு கப்பலில் நடந்தது. 3 நாள் நடந்த இந்த கொண்டாட்டத்திலும் திரை பிரபலங்கள் உட்பட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு வாட்ச்க்கு இத்தனை கோடியா! வாயைப் பிளக்க வைக்கும் ஆனந்த் அம்பானியின் காஸ்ட்லி வாட்ச்!
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட நிகழ்வுக்கு முன்னதாக அம்பானி குடும்பத்தினர் பல திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வகையில் ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பிரம்மாண்ட விழாவை நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.
இந்த ஏழை எளிய ஜோடிகளின் பிரம்மாண்ட திருமணம், ஜூலை 2 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பால்கரில் உள்ள சுவாமி விவேகானந்த் வித்யாமந்திரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்வு தற்போது புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏழை எளிய ஜோடிகளின் திருமணம் தானேயில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதி ஏற்பாடு செய்துள்ள இந்த பிரம்மாண்ட திருமண விழாவுக்கு அம்பானி குடும்பம் தான் முழுக்க முழுக்க நிதியுதவி செய்துள்ளது. மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் முகேஷ் - நீதா தம்பதி மணமக்களை வாழ்த்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஜூன் 29 ஆம் தேதி அம்பானிகளின் இல்லமான ஆண்டிலியாவில் அனந்த் - ராதிகாவின் திருமணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்துள்ளது. இதன் மூலம் அனந்த் - ராதிகாவின் திருமண கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
முகேஷ் அம்பானி மருமகள்களை விட பணக்கார பெண்.. சானியா மிர்சாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
கடந்த சில நாட்களாக முகேஷ் - நீதா தம்பதி பல்வேறு பிரபலங்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். மேலும் அனந்த் - ராதிகாவின் திருமண அழைப்பிதழ் தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஏற்கனவே வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில், ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் ஜூலை 13 ஆம் தேதி சுப் ஆஷிர்வாத் அல்லது தெய்வீக ஆசீர்வாத விழாவும், ஜூலை 14 ஆம் தேதி மங்கள் உத்சவ் அல்லது திருமண வரவேற்பு நிகழ்ச்சியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.