
மறதி என்பது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சொந்த பெயரை மறப்பது, வீட்டின் சாவி மறப்பது, மொபைல் போன், பர்ஸ் போன்ற பொருளை வைத்த இடத்தில் மறப்பது, பல இடங்களில் தொலைந்து போதல், பேசும் வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமம், நாட்கள் மற்றும் நேரம் குறித்த குழப்பம், முக்கியமான நிகழ்வுகள் அல்லது சந்திப்புகளை மறப்பது, அன்றாட வேலைகளை செய்வது மறப்பது அல்லது செய்து கொண்டிருந்த வேலைகள் அல்லது விஷயங்களை மறப்பது, பேசின விஷயங்களை திரும்பத் திரும்ப பேசுவது, சமுதாயத்தில் வித்தியாசமாக நடந்து கொள்வது போன்றவை மறதிக்கான அறிகுறிகள் ஆகும். பொதுவாக வயதானவர்களிடம் தான் மறதி பிரச்சனை அதிகமாக இருக்கும்.
வயதானவர்களுக்கு வரும் இந்த பிரச்சனை ஒரு பொதுவான பிரச்சனை என்று கூட சொல்லலாம். ஆனால் தற்போது இளம் வயதினர்களிடையே இந்த பிரச்சனை ஏற்படுகிறது தெரியுமா? இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இல்லையெனில் பெரிய பிரச்சனையாகிடும். இந்த பதிவில் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு காண பொதுவான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து பார்க்கலாம்.
இளைஞர்களுக்கு ஞாபக மறதி எதனால் வருகிறது?
1. வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது.
2. அதிக மன அழுத்தம் பதட்டம் காரணமாகவும் நினைவாற்றல் குறைபாடு வருகிறது.
3. போதிய தூக்கம் இல்லை என்றால் மூளை சிறப்பாக செயல்படுவது பாதிக்கப்படும். இதனால் பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது கடினம்.
4. சில சமயங்களில் நினைவாற்றல் பிரச்சினைக்கு அல்சைமர் நோய் அல்லது பிற வகையான டிமென்ஷியா போன்றவையும் காரணமாகும்.
நினைவாற்றலை மேம்படுத்த உதவும் சில வழிமுறைகள் ;
1. சுறுசுறுப்பாக இருங்கள்
இதற்கு தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி வெறும் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அது உங்களது மூளைக்கும் ரொம்பவே நல்லது. நீங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நினைவாற்றல் கூர்மையாக இருக்கும். இதற்கு நீங்கள் கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு விறுவிறுப்பான வாக்கிங் கூட போதும். பெரிய வித்தியாசத்தை காண்பீர்கள்.
2. போதுமான தூக்கம்
மூளைக்கு ஓய்வு மிகவும் அவசியம். எனவே வாய்ப்பு கிடைக்கும் நேரமெல்லாம் தூங்குங்கள். ஒரு நாளைக்கு சுமார் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். தூங்குவதில் சிக்கல் இருந்தால் படுக்கைக்கு முன் செல்போன், டிவி பார்ப்பதை நிறுத்துங்கள். அதுபோல தினசரி படுக்கை வழக்கத்தை அமைக்கவும்.
3. ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்
மூளை ஆரோக்கியமாக இருக்க சமசீரான உணவு சாப்பிடுவது மிகவும் முக்கியம். வைட்டமின் குறைபாடு இருந்தால் நினைவாற்றல் இழப்பு ஏற்படும். எனவே ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற உணவுகள் அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். இவை உங்களது மூளையை சேதத்திலிருந்து பாதுகாக்கும். இதற்கு கீரைகள், பச்சை இலை காய்கறிகள், நட்ஸ்கள், விதைகள், மீன்கள், ப்ளூபெர்ரி போன்றவை சாப்பிடலாம்.
4. மூளைக்கு வேலை
தசைகளுக்கு மட்டுமல்ல மூளைக்கும் உடற்பயிற்சி தேவை. இதற்கு புத்தகங்கள் வாசித்தல், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல், புதிர்கள் போடுதல், சதுரங்கம் விளையாடுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். நினைவாற்றல் மேம்படும்.
5. மன அழுத்தத்தை நிர்வகிப்பது
அதிக மன அழுத்தம் மூளை மற்றும் நினைவாற்றல் செயல்களை பாதிக்கும். எனவே மன அழுத்தத்திலிருந்து விடுபட தினமும் யோகா, தியானம், சுவாச பயிற்சி செய்யுங்கள்.
6. உங்களுக்கான நேரம்
இதற்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிறிது நேரம் பேசுவதன் மூலம் மூளையை கூர்மையாக வைத்திருக்க முடியும். ஏனெனில் நல்ல உரையாடல், பேசுதல், சிரித்தல் போன்றவை நினைவாற்றல் நலத்திற்கு ரொம்பவே முக்கியம். எனவே சிறிது நேரம் பிறருடன் பேசுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு :
அவ்வப்போது சில விஷயங்கள் உள்ளது செயல்களை மறந்து விடுவது இயல்பானது என்றாலும், அந்த பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டால் நிலைமை மோசமாகிவிடும். எனவே, மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.