
பள்ளி முடிந்து வந்ததும் முதலில் செல்போனை தேடும் குழந்தைகள் ஏராளம். காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கச் செல்லும் முன்பு வரை செல்போனை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் போனை கேட்டால் அழுவார்கள். கேம் விளையாடுவது, வீடியோ பார்ப்பதுதான் அவர்களின் பொழுதுபோக்கு.
பல குழந்தைகளின் உலகமே செல்போனாகத்தான் இருக்கும். ஆனால் இது பெற்றோருக்கு பெரிய தலைவலி. சாப்பிடும்போது தொடங்கி படுக்கும்போது வரை செல்போன் கொடுத்தால் அவர்கள் சமர்த்தாக இருப்பார்கள். இந்தப் பதிவில் நாள் முழுக்க செல்போன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் குழந்தைகளை எப்படி திருத்துவது என காணலாம்.
பாதிப்புகள்
குழந்தைகள் அதிகமாக செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் தடுக்கவில்லை என்றால் மோசமான பாதிப்புகள் ஏற்படும். அவர்களுக்கு எதார்த்த வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் புரியாமல் போகலாம். எதிலும் திருப்தி இல்லாத உணர்வு மன அழுத்தம் சிறு வயதிலே ஏற்படக்கூடும். சில குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படலாம். பதட்டம், மனச்சோர்வு ஆகியவை வரக்கூடும். நண்பர்களுடன் உரையாடுவது, சமூகத்துடன் ஒன்றுதல் போன்றவற்றில் அவர்கள் ஆர்வம் காட்டாமல் போகலாம். இந்த பாதிப்புகளை தடுக்க பெற்றோர் சில விஷயங்களை கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம்.
குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுக்க வேண்டாம் என பெற்றோர் தீர்மானித்தால், மற்ற விஷயங்களில் அவர்களை எப்படி பிசியாக வைத்திருப்பது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மாலை வேளைகளில் அவர்களை விளையாட அழைத்துச் செல்ல வேண்டும். பூங்கா, மைதானம் என உடல் ரீதியான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். விளையாட்டுகள், சைக்கிளிங், நீச்சல் போன்றவை அவர்களை புத்துணர்வாக வைத்திருக்கும். புத்தகங்கள் படிப்பது, கிரியேட்டிவான செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம்.
குழந்தைகளை திருத்தும் முன் பெற்றோர் சரியாக இருக்கவேண்டும். அடிக்கடி போன் பார்ப்பது, ரீல்ஸ் காண்பது என பெற்றோரே போனுக்கு அடிமையாக இருந்தால் குழந்தையை திருத்துவது கடினம். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். குழந்தைகளின் ஸ்கிரீன் நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். ஒரு நாளுக்கு 1 மணி நேரம் மட்டும்தான் ஸ்கிரீன் டைம் என கண்டிப்பாக சொல்லிவிட வேண்டும். எவ்வளவு அடம்பிடித்தாலும் அதற்கு மேல் டிவி, போன், மடிக்கணினி, டேப்லெட் என எதுவும் கொடுக்கக் கூடாது. இருக்கலாம். இதில் உறுதியாக இருந்தால் ஒருமணி நேரத்திற்கு மேல் கிடைக்காது என புரிந்து கொள்வார்கள்.
குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது அவர்களுடைய நேரத்தைதான். நீங்கள் குழந்தைகளுடன் இருக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். குழந்தைகளுடன் அதிகம் பேசுவதை பழக்கப்படுத்துங்கள். கதை சொல்லுவது, புதிர்கள் போடுவது என அவர்களுடன் உரையாடுவது, விளையாடுவது செல்போன் பயன்படுத்துதல் இருந்து அவர்களை விலக்கி வைக்க உதவும்.
குழந்தைகளை வீட்டில் சிறுசிறு வேலைகளில் ஈடுபடுத்துங்கள். துணிகளை மடிப்பது, விளையாட்டு பொருள்களை அடுக்கி வைப்பது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற சிறு சிறு வேலைகளை செய்வதற்கு குழந்தைகளை பழக்குங்கள். இது அவர்களுடைய நேரத்தை பயனுள்ள வகையில் போக்குவதற்கு உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.