
சீமை சுரைக்காய் என்ற செள செள உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பச்சை காய்கறி. இதுவும் சுரைக்காய் குடும்பத்தை சேர்ந்ததுதான். குறைந்த கலோரிகள் கொண்டது. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து என ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டது. ஒரு வாரத்தில் 4 முறை இதை சாப்பிட்டால் கூட கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
வைட்டமின் சி, ஈ, கே ஆகியவை உள்ளன. பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மெக்னீசியம் ஆகிய தாதுக்ளும் செள செளவில் இருப்பதால் எடை குறைப்பு, செரிமான மேம்பாடு, இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
இதய ஆரோக்கியம்:
அதிக கொழுப்புள்ள அடிக்கடி உணவுகளை உண்பதால் இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. நாளடைவில் தமனிகளில் படிந்த கொழுப்பு இரத்தபோட்டத்தைப் பாதித்து இதய அடைப்பு நோய் பரவலாகி வருகிறது. சௌசௌவில் காணப்படும் பிளவனாய்டுகள் தமனிகளில் படிந்திருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.
கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கு இரும்பு, கால்சியம், ஃபோலேட் முக்கியம். இதனுடன் சில வைட்டமின்களும் தேவை. செள செள காயில் ஃபோலேட் அதிகம் உள்ளது. இது கரு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இளமையான தோற்றம்
சௌ சௌ காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. இவை வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் செயல்முறையை தாமதப்படுத்தக் கூடும் என சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சௌ செள காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி இளமையான தோற்றத்திற்கு உதவும். வைட்டமின் சி சருமத்தில் கொலாஜனை உருவாவதை ஊக்குவிக்கும். சௌசௌ வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை எடுத்துக் கொள்வதால் முகத்தை சுருக்கங்கள், கோடுகள் ஆகிய வயதான அறிகுறிகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.
கல்லீரல் பராமரிப்பு
துரித உணவுகள், போதுமான உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரல் திசுக்களில் கொழுப்பு சேர்கிறது. இதனால் நாளைடைவில் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை தடுக்க சௌசௌ காய் சாப்பிடுவதை வழக்கப்படுத்தலாம். இந்த காயில் உள்ள சில பண்புகள் கல்லீரலில் கொழுப்பு சேருவதை தடுத்து ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
குடல் ஆரோக்கியம்
சௌசௌ காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதை வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் உட்கொள்வதால் மூல நோய், மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அது மட்டுமின்றி குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை சௌ சௌ ஆதரிப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
எடை குறைப்பு
சௌசௌ காயில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் பசி குறையும். ரொம்ப நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் ஒரு வாரத்தில் 2 முதல் 3, நாட்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.
சௌ சௌ ரெசிபி
சௌசௌ சமைப்பதற்கு முதலில் அதை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குக்கர் ஒரு கப் பாசிப்பருப்பு எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் நறுக்கிய சௌசௌ காயின் போட்டுக் கொள்ளுங்கள். 10 முதல் 20 சின்ன வெங்காயம், மீடியம் சைஸ் தக்காளி ஒன்றையும் நறுக்கி சேருங்கள். 10 பல் பூண்டு, 3 மிளகாய், சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குக்கரை மூடி வையுங்கள். 2 விசில் விட்டால் போதும். இதனிடையே, மிக்ஸியில் தேங்காய், சீரகம், 5 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். குக்கர் விசில் வந்த பின்னர் அதை இறக்கி பிரஷர் நீங்கிய பின், அரைத்த மசாலாவை சேருங்கள்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் குழம்பாக வைப்பதாக இருந்தால் அதிகமான தண்ணீரும், கூட்டு என்றால் குறைந்த அளவு தண்ணீரும் ஊற்றிக் கொள்ளுங்கள். மசாலா வாசனை நீங்கி பின் இந்த கலவையில் தாளித்து ஊற்ற வேண்டும். ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் 1 ஸ்பூன் கடுகு, உளுந்து போட்டு தாளித்து கொள்ளுங்கள். இதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வத்தல், கறிவேப்பிலையை சேர்த்து கொள்ளுங்கள். இறுதியில் 1/4 ஸ்பூன் பெருங்காயம் போட்டு கலந்து தயாரான சௌ சௌ கூட்டை பரிமாறலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.