சென்னை தமிழ் பேச்சை ஒரு தரப்பினர் இழிவாகப் பார்க்கும் நிலை உள்ளது. ஆனால், அந்த மெட்ராஸ் பாஷை வார்த்தைகளுக்குப் பின்னால் பல அரிய செய்திகள் உள்ளன.
நெல்லை தமிழ், நாஞ்சில் தமிழ், தஞ்சை தமிழ், கொங்கு தமிழ், ஈழத் தமிழ் என வட்டார வழக்குகள் இருப்பதைப் போல சென்னை நகருக்கு என தனி வழக்குச் சொற்கள் உண்டு. அவைதான் சென்னைத் தமிழ் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளன. தாராந்துட்டான், ஒத்திப்போ, மெர்சல், நாஸ்தி, பூட்டகேசு, உடான்ஸ், பேஜாரு, இஸ்த்து, நவ்ரு, குஜால் என்று பல வார்த்தைகள் சென்னையில் மட்டுமே புழக்கதில் உள்ளவை.
திரைப்படங்களிலும் சென்னைத் தமிழ் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பழம்பெரும் நடிகர்கள் முதல் தற்கால நடிகர்கள் வரை சென்னைத் தமிழ் பேசி அசத்திய நடிகர்கள் பல இருக்கிறார்கள். நடிகர்கள் கமல், தேங்காய் சீனிவாசன், சந்திரபாபு, சோ போன்றவர்கள் நிறைய படங்களில் சென்னை தமிழில் பேசி கலக்கி இருப்பர்கள்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து சென்ற நகரமாக இருந்துவரும் நகரம் சென்னை. அவர்களில் பலர் சென்னையிலேயே தங்கியுள்ளனர். அவர்கள் பேசும் வெவ்வேறு மொழிச் சொற்களை சென்னை தமிழ் உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. பஜார், படா பேஜார், மஜா, கேடி, தவுலத், உட்டாலங்கடி, உல்ட்டா போன்ற வார்த்தைகள் அதற்கு உதாரணம்.
கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட்டால் ரூ.500 அபராதம்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
எதையேனும் தவறவிட்டுவிட்டு வந்தால், சென்னை தமிழில் "தாராத்துட்டியா" என்று கேட்பார்கள். ஏதாவது ஒன்றை யாரிடமாவது பறிகொடுப்பதை குறிக்க தாரை வார்த்தல் என்ற சொல் உள்ளது. அந்த வார்த்தையில் இருந்து வந்தது தான் தாராத்துட்டியா என்ற வார்த்தை.
சென்னை தமிழில் உட்காரச் சொல்லும்போது குந்து என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். குந்து, குந்தி போன்ற சொற்கள் அமர்தலைக் குறிக்க தமிழ் இலக்கியங்களில் கையாளப்பட்ட நல்ல தமிழ் சொல் ஆகும். அந்த வார்த்தையை சென்னை தமிழ் அப்படியே பத்திரமாக பாதுகாத்து வருகிறது.
நம்ப வைத்து ஏமாற்றும் நபரை பேமானி என்று திட்டுவதை சென்னை மக்கள் மத்தியில் கேட்க முடியும். இந்த வார்த்தை 'பே இமான்' என்ற உருது மொழி வார்த்தையில் இருந்து வந்திருக்கிறது. உருது மொழியில் இதற்கு கொடுத்து வாக்கைக் காப்பாற்றாமல் இருப்பதைக் குறிக்கும்.
நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.யின் அருவருப்பான பேச்சு; எதிர்க்கட்சிகள், சபாநாயகர் கடும் கண்டனம்
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோட்டை ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணிகளுக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களில் தொப்பிகள் கொடுக்கப்பட்டன. தொப்பியின் நிறத்தை வைத்து சலுகைகள் கொடுக்கப்படும். அப்போது சிலர் தங்களுக்குள் தொப்பியை மாற்றிக்கொண்டு சலுகைகளைப் பெறுவார்களாம். அப்படி ஏமாற்றும் நபர்களை கேப்மாறி என்று சொன்னார்கள். அந்த வார்த்தைதான் மோசடி பேர்வழிகளைக் குறிக்கும் சொல்லாக இன்று வரை நிலைத்துவிட்டது.
பல மொழிகளையும் கிரகித்துக்கொண்டு, பழைய தமிழ் சொற்களையும் தக்கவைத்துக்கொண்டு வளம் அடைந்துள்ள சென்னை தமிழ் பேச்சை ஒரு தரப்பினர் இழிவாகப் பார்க்கும் நிலை உள்ளது. சென்னை மாநகரில் உள்ள சாமானியர்கள் பேசும் சொற்களின் பின்னணியை அறிந்துகொண்டால் சென்னைத் தமிழ் பற்றிய தவறான பார்வையும் மாறும் காலம் வரும்.
AI அம்சங்களுடன் புதிய வீடியோ எடிட்டிங் ஆப்! அசத்தலான வசதிகளுடன் யூடியூப் கிரியேட் அறிமுகம்!