பழைய யுவராஜ் சிங் திரும்ப வந்துட்டாரு!! சொன்னதை செய்து செம கெத்து காட்டிய யுவி

By karthikeyan VFirst Published Mar 25, 2019, 12:10 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பழைய யுவராஜ் சிங்கை மீண்டும் காண முடிந்தது. 
 

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பழைய யுவராஜ் சிங்கை மீண்டும் காண முடிந்தது. 

இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகியவற்றை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றபோது அந்த அணியில் முக்கிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். யுவராஜ் சிங் அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது, அதிகபட்ச விலைக்கு ஏலம்போனார். 

ஆனால் அவரை இந்த சீசனில் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. அவரது அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முன்வராத நிலையில், இரண்டாம் கட்ட ஏலத்தில் அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் சிக்கல் இருந்த நிலையில், அதற்கு தீர்வாக பார்க்கப்பட்டார் யுவராஜ் சிங். அதற்கேற்றாற்போலவே, யுவராஜ் சிங்கும் தான் இந்த சீசனில் மும்பை அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வாக அமையப்போவதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார். கடந்த சீசனில் மும்பை அணியில் நிலவிய மிடில் ஆர்டர் பிரச்னையால் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, தானாக முன்வந்து மிடில் ஆர்டரில் இறங்கினார். எனவே இந்த சீசனில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவதற்கு நான் உதவிகரமாக இருப்பேன். மிடில் ஆர்டர் பிரச்னையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் யுவராஜ் சிங்.

தான் சொன்ன வார்த்தையை நேற்றைய போட்டியில் காப்பாற்றினார் யுவராஜ் சிங். 214 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டும்போது, மும்பை அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடினார் யுவராஜ் சிங். அக்சர் படேல் பந்தில் அடித்த சிக்ஸர், அவரது அக்மார்க் ஷாட்டில் அடித்த ஒரு சிக்ஸர் என சில ஷாட்டுகள் பழைய யுவராஜ் சிங்கை நினைவுபடுத்தின. 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அரைசதம் அடித்து, தன்னம்பிக்கையை பெற்றார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் ஐபிஎல்லுக்கு முன் சொன்னதை போலவே சிறப்பாக ஆடி அணியின் நம்பிக்கையையும் பெற்றுவிட்டார். அவரது நேற்றைய இன்னிங்ஸ், அவருக்கு மட்டுமல்லாமல் அவர் மீது அணியினருக்கும் நம்பிக்கையை பெற்றுத்தந்துள்ளது. 

click me!