தோனியின் சாதனையை அசால்ட்டா முறியடித்த ரிஷப் பண்ட்!! வான்கடேவில் வாணவேடிக்கை

By karthikeyan VFirst Published Mar 25, 2019, 10:26 AM IST
Highlights

7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 27 பந்துகளில் 78 ரன்களை குவித்தார். ரிஷப்பின் அதிரடியான பேட்டிங்கால் டெல்லி கேபிடள்ஸ் அணி 213 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் தனது அதிரடியான பேட்டிங்கால், தோனியின் முந்தைய சாதனை ஒன்றை முறியடித்துள்ளார் ரிஷப் பண்ட். 
 

ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. இதில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. 

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, டெல்லி கேபிடள்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். டெல்லி கேபிடள்ஸ் அணியின் தவானும் இங்கிராமும் இணைந்து நன்றாக ஆடினர். இங்கிராமின் விக்கெட்டுக்கு பிறகு 5வது வீரராக களத்திற்கு வந்தார் ரிஷப் பண்ட். 

ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பண்ட் சோபிக்காத நிலையில், நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் எப்படி ஆடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு குறை வைக்காமல் அடித்து நொறுக்கினார் ரிஷப் பண்ட். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். உலகின் நம்பர் 1 பவுலரும் டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவருமான பும்ராவின் பவுலிங்கையே வெளுத்து வாங்கிவிட்டார். 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 27 பந்துகளில் 78 ரன்களை குவித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் டெல்லி கேபிடள்ஸ் அணி 213 ரன்களை குவித்தது. 

214 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடினார் யுவராஜ் சிங். எனினும் அவரால் இலக்கை விரட்டமுடியவில்லை. கடைசியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடள்ஸ் அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதல் ரன்னை 5வது பந்தில் எடுத்த ரிஷப் பண்ட், 18 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்து மிரட்டினார். முதல் ரன்னை எடுக்க மட்டும்தான் போராடினார். அதன்பின்னர் வான்கடேவில் வாணவேடிக்கை நிகழ்த்தினார். 18 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ரிஷப் பண்ட்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2012ம் ஆண்டில் 20 பந்தில் தோனி அடித்த அரைசதம் தான் அதிவேக அரைசதமாக இருந்தது. நேற்றைய போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில், கேஎல் ராகுல் 14 பந்துகளில் கடந்த சீசனில் அடித்தது தான் அதிவேக அரைசதம். சுனில் நரைன் மற்றும் உத்தப்பா ஆகிய இருவரும் 15 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர். சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அடித்துள்ளார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் இதுதான். 
 

click me!