வாய் உதார் விட்டு வாங்கி கட்டிய ராஜஸ்தான் வீரர்!!

By karthikeyan VFirst Published Apr 8, 2019, 11:26 AM IST
Highlights

ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மட்டும்தான் ரசல் பேட்டிங் ஆடவில்லை. அதற்கு முந்தைய 4 போட்டிகளில் 3 வெற்றிகளுக்கு ரசலின் பங்களிப்பு அளப்பரியது. கேகேஆர் அணி மற்ற வீரர்களை காட்டிலும் ரசலை சற்று அதிகமாக சார்ந்திருக்கிறது. 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணி ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

கேகேஆர் அணி டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. சுனில் நரைன் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்கிறார். ஆண்ட்ரே ரசல் டெத் ஓவர்களில் செம அதிரடியாக ஆடி போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கிறார். 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மட்டும்தான் ரசல் பேட்டிங் ஆடவில்லை. அதற்கு முந்தைய 4 போட்டிகளில் 3 வெற்றிகளுக்கு ரசலின் பங்களிப்பு அளப்பரியது. கேகேஆர் அணி மற்ற வீரர்களை காட்டிலும் ரசலை சற்று அதிகமாக சார்ந்திருக்கிறது. 

ரசல் தான் கடைசி ஓவர்களில் போட்டியை தலைகீழாக புரட்டிப்போட்டு விடுகிறார். செய்ய முடியாத சம்பவங்களை எல்லாம் செய்து காட்டுகிறார். கேகேஆர் அணியின் வெற்றி நாயகனாக திகழ்கிறார். எனவே ரசலை எதிரணிகள் விரைவில் வீழ்த்துவது முக்கியம். ஆனால் அவர் 6 அல்லது 7ம் வரிசையில் தான் இறங்குகிறார். 

இந்நிலையில், நேற்றைய போட்டிக்கு முன்னதாக ராஜஸ்தான் அணியின் ஸ்பின்னர், ஆண்ட்ரே ரசலை வீழ்த்த அணி திட்டம் வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் ராஜஸ்தான் அணி அடித்த ஸ்கோரை விரட்டுவதற்கு ரசல் களத்திற்கு வர வேண்டிய அவசியமே இல்லாமல் போயிற்று. 

வெறும் 140 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணி, சுனில் நரைன் - லின்னின் அதிரடியான தொடக்கத்தாலும் உத்தப்பாவின் அதிரடியாலும் 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ரசலுக்கு எதிராக திட்டங்கள் இருப்பதாக கூறிய கிருஷ்ணப்பா கௌதம் வீசிய இரண்டாவது ஓவரிலேயே சுனில் நரைன் கேகேஆர் அணியின் வெற்றியை உறுதி செய்துவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 22 ரன்களை குவித்தார். அப்போதே ஆட்டம் கேகேஆர் அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

click me!