இனிமே பாருங்கடா தெறிக்கவிடுறோம்.. உற்சாகத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி

By karthikeyan VFirst Published Mar 27, 2019, 1:49 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய முதல் போட்டியில் நட்சத்திர பவுலர் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு பெரிய காயம் இல்லை. விரைவில் குணமாகிவிடுவார் என கூறப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கையாக ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. 

ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸும் திகழ்கின்றன. கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனால் சென்னை அணி கடந்த சீசனில் கோப்பையை வென்றது. 

கடந்த சீசனில் முதல் 7 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. கடைசி 7 போட்டிகளில் 4ல் வென்றது. எனினும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. கடந்த சீசனில் மும்பை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் குறைகளாக இருந்தன. எனவே அதை களைவதற்காக, கடந்த சீசனில் பவுலிங் பயிற்சியாளராக இருந்த மலிங்காவை மீண்டும் அணியில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ். மேலும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே ஆகிய இருவரையும் அணியில் எடுத்தது.

அந்த அணியின் நட்சத்திர பவுலராக திகழ்ந்த மலிங்காவை மீண்டும் அணியில் இணைத்த மகிழ்ச்சியில் இருந்தது மும்பை இந்தியன்ஸ். ஆனால் உலக கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெற வேண்டுமானால் ஏப்ரல் 4 முதல் 11 வரை அங்கு நடக்கும் உள்நாட்டு தொடரில் அனைத்து வீரர்களும் ஆட வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டதால், மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய முதல் போட்டியில் ஆடமுடியவில்லை. 

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய முதல் போட்டியில் நட்சத்திர பவுலர் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு பெரிய காயம் இல்லை. விரைவில் குணமாகிவிடுவார் என கூறப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கையாக ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. எனவே மலிங்கா கண்டிப்பாக அந்த அணிக்கு தேவை. இதையடுத்து பிசிசிஐ-யும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பேசியது. உலக கோப்பை அணியில் மலிங்கா இடம்பெறுவது உறுதி என்பதால், அவர் ஐபிஎல்லில் ஆட இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது. 

இதையடுத்து 28ம் தேதி(நாளை) ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மலிங்கா ஆடுகிறார். மலிங்கா அணிக்கு திரும்புவதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் ரசிகர்களும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். 
 

click me!