அவன் ஒருத்தனே எல்லா மேட்ச்சும் அடிக்க முடியுமா..? நீயெல்லாம் எதுக்குப்பா இருக்க..? தவானை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்ட பாண்டிங்

By karthikeyan VFirst Published Mar 28, 2019, 1:00 PM IST
Highlights

பாண்டிங் மற்றும் கங்குலி ஆகிய இருவரும் இணைந்து ஒரு அணியை வழிநடத்துவதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி அணிக்கு தென்னாப்பிரிக்க வீரர் கோலின் இங்கிராம் வலு சேர்க்கிறார். 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத டெல்லி கேபிடள்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடிவருகின்றன. 

இந்த அணிகளில் டெல்லி கேபிடள்ஸ் அணிதான் இம்முறை கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு 2 முறை உலக கோப்பையை வென்று கொடுத்த மற்றும் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவருமான ரிக்கி பாண்டிங், டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவர் மட்டும் போதாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை ஆலோசகராக நியமித்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.

பாண்டிங் மற்றும் கங்குலி ஆகிய இருவரும் இணைந்து ஒரு அணியை வழிநடத்துவதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி அணிக்கு தென்னாப்பிரிக்க வீரர் கோலின் இங்கிராம் வலு சேர்க்கிறார். 

ஆனால் பெரிய நம்பிக்கையுடன் மூன்று வீரர்களை தாரைவார்த்து அணியில் எடுக்கப்பட்ட ஷிகர் தவான் பெரிதாக சோபிக்கவில்லை; மந்தமாக ஆடுகிறார். விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷாபாஷ் நதீம்  ஆகிய மூன்று வீரர்களை சன்ரைசர்ஸ் அணிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தவானை அந்த அணியிடமிருந்து வாங்கியது டெல்லி கேபிடள்ஸ். தவான் டெல்லி அணிக்கு ஆடுவதால் பிரித்வி ஷாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால் தவான் இதுவரை டெல்லி ஆடியுள்ள 2 போட்டிகளிலுமே மந்தமாகவே ஆடியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 36 பந்துகளில் வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்களை குவித்ததால் தான் அந்த அணி 213 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தவான் அரைசதம் அடித்திருந்தாலும் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. 47 பந்துகள் ஆடி வெறும் 51 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது இன்னிங்ஸ் டெல்லி அணிக்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை. களத்தில் நிலைத்துவிட்ட தொடக்க வீரர், 47 பந்துகளில் அரைசதம் அடித்தால் அதன்பின்னர் இறுதிவரை நின்று பெரிய இன்னிங்ஸை ஆடி, அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவவேண்டும். ஆனால் 17 ஓவர் வரை களத்தில் நின்ற தொடக்க வீரர் தவானால் அந்த அணிக்கு எந்த பயனும் இல்லாமல் போனது. 

டி20 போட்டிகளில், அதுவும் கடும் சவாலான ஐபிஎல் போட்டிகளில் தவான் இவ்வளவு மந்தமாக ஆடினால், அது அணிக்கு எதிரான முடிவையே பெற்றுத்தரும். அணிக்கு உபயோகமான இன்னிங்ஸை ஆடவேண்டும். அதைவிடுத்து 17 ஓவர் வரை நின்று 47 பந்துகளில் 51 ரன்கள் என்பது எதற்கும் பயன்படாது. அந்த போட்டியில் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் தவான் 17 ஓவர் வரை நின்றும் பெரிதாக ஆடாததால் வெறும் 147 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி அணி. அந்த இலக்கை எட்டி சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டது. 

இந்நிலையில், தவான் குறித்து பேசிய டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஷிகர் தவானுக்கு என்று ஒரு ரோல் உள்ளது. அணிக்காக அவர் அதை சிறப்பாக செய்தாக வேண்டும். அவர் விரைவாக ரன்களை எடுக்க வேண்டும். சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 15 ஓவருக்கு 118 ரன்கள் என்ற நிலையில் இருந்தோம். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடிய அதிரடி ஆட்டத்தை அவரிடமிருந்து ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்க்க முடியாது. எந்த ஒரு வீரராலும் அப்படி ஆடவும் முடியாது. எனவே ரிஷப் பண்ட்டிடமிருந்தே எப்போதும் பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்க முடியாது. தவான் பொறுப்பை உணர்ந்து விரைவாக ரன் அடிக்க வேண்டும் என்று பாண்டிங் கடுமையாக சாடியுள்ளார். 
 

click me!