கேப்டன்னா இப்படிதாங்க இருக்கணும்.. சபாஷ் அஷ்வின்

By karthikeyan VFirst Published Mar 28, 2019, 12:07 PM IST
Highlights

தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார் அஷ்வின். அஷ்வினின் அந்த செயல் உண்மையாகவே சிறந்த தலைமைத்துவ பண்பு. 

ஐபிஎல்லில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, உத்தப்பா - ராணா ஆகியோரின் பொறுப்பான அரைசதம் மற்றும் கடைசி நேர ரசலின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது. 

219 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் கெய்ல் ஆகியோர் முறையே 1 மற்றும் 20 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு மயன்க் அகர்வால் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் கான் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பின்னர் டேவிட் மில்லரும் மந்தீப் சிங்கும் அதிரடியாக ஆடி கடைசி வரை போராடினர். எனினும் இலக்கு மிகவும் அதிகம் என்பதால் அவர்களால் எட்டமுடியவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்கள் மட்டும்தான் அடித்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் கேகேஆர் அணியின் பேட்டிங்கின்போது நடந்த ஒரு சம்பவம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கேகேஆர் அணி 218 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை எட்டியதற்கு கடைசி நேரத்தில் ரசல் அடித்த அடிதான் காரணம். 17 ஓவர் வரை கேகேஆர் அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 3 ஓவரில் 55 ரன்களை குவித்தது. அதற்கு ரசலின் அதிரடிதான் காரணம். 

ஆண்ட்ரூ டை வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசிய ரசல், ஷமி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி மிரட்டினார். ஆனால் 17வது ஓவரிலேயே ரசல் அவுட். அவரது அதிர்ஷ்டம் அது நோ பாலானது. ரசல் அதிரடியாக ஆடக்கூடிய வீரர். ஆனால் அவரது பலவீனம் யார்க்கர்கள். அதை அறிந்து 17வது ஓவரில் ஷமி தொடர்ச்சியாக யார்க்கர்களாக வீசி ரசலை கட்டுப்படுத்தினார். 17வது ஓவரின் கடைசி பந்தை ஷமி அபாரமான யார்க்கராக வீசினார். அந்த யார்க்கரின் கிளீன் போல்டானார் ரசல். ஆனால், 30 யார்டு வட்டத்திற்குள் 4 வீரர்கள் நிற்கவேண்டிய வேளையில் வெறும் 3 ஃபீல்டர்கள் மட்டுமே நின்றதால் அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. 

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ரசல், கடைசி 3 ஓவர்களில் அடித்து நொறுக்கிவிட்டார். அந்த நோ பால் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த போட்டியில் பஞ்சாப் அணியில் ஆடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹார்டஸ் வில்ஜியான் ஆகிய இருவருக்குமே அதுதான் முதல் போட்டி. எனவே இருவருக்கும் ரிங்குக்கு வெளியே நிற்கிறோம் என்பது தெரியவில்லை. இருவரில் ஒருவர் உள்ளே நின்றிருக்க வேண்டும். 

இந்நிலையில், போட்டி  முடிந்த பின் இதுகுறித்த பேசிய ரசல், ரிங்குக்கு வெளியே நின்ற அந்த வீரருக்கு நன்றி. அவர் புதிய வீரர்; அவரது பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் செய்த உதவி மிகப்பெரியது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றி. நான் அவுட்டானதும் இன்றைய நாளை வீணடித்துவிட்டோம் என்று வருந்தினேன். ஆனால் நோ பால் என்று சொன்னதும் எனக்கு கடவுள் மற்றொரு வாய்ப்பு கொடுத்துவிட்டார் என்பதை உணர்ந்தேன். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்து அடித்து ஆடினேன். இதுபோன்ற வாய்ப்புகள் எப்போதும் கிடைக்காது. ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் ரசல். 

போட்டிக்கு பின்னர் இந்த நோ பால் சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப் கேப்டன் அஷ்வின், அந்த நோ பாலுக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன். அந்த நேரத்தில் ஃபீல்டர்கள் அவர்களாகவே சரியாக நின்றிருப்பார்கள் என்று நம்புவது எதார்த்தம். ஆனால் வருணும் ஹார்டஸும் அறிமுக வீரர்கள். அந்த வகையில் நான் ஃபீல்டிங்கை செக் செய்திருக்க வேண்டும். எனவே அந்த நோ பாலுக்கான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று அஷ்வின் தெரிவித்தார். 

ஒரு அணியாக இருக்கும்போது நடக்கும் தவறுகளுக்கு கேப்டன் தானே முன்வந்து பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதான் தலைமைத்துவ பண்பு. அந்த வகையில் ஒரு கேப்டனாக அஷ்வினின் செயல் பாராட்டுக்குரியது. வீரர்கள் மீது பழி சுமத்தாமல் தானே பொறுப்பேற்றுக்கொண்டார். சபாஷ் அஷ்வின்...
 

click me!