ஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்.. ஆண்ட்ரே ரசலுக்கு அடிச்சது லக்கு!! அஷ்வின் அதிர்ச்சி.. ஷமி அதிருப்தி

By karthikeyan VFirst Published Mar 28, 2019, 10:49 AM IST
Highlights

இந்த போட்டியில் கேகேஆர் அணியின் பேட்டிங்கின்போது நடந்த ஒரு சம்பவம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கேகேஆர் அணி 218 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை எட்டியதற்கு கடைசி நேரத்தில் ரசல் அடித்த அடிதான் காரணம்.

ஐபிஎல்லில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, உத்தப்பா - ராணா ஆகியோரின் பொறுப்பான அரைசதம் மற்றும் கடைசி நேர ரசலின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது. 

219 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் கெய்ல் ஆகியோர் முறையே 1 மற்றும் 20 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு மயன்க் அகர்வால் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் கான் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பின்னர் டேவிட் மில்லரும் மந்தீப் சிங்கும் அதிரடியாக ஆடி கடைசி வரை போராடினர். எனினும் இலக்கு மிகவும் அதிகம் என்பதால் அவர்களால் எட்டமுடியவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்கள் மட்டும்தான் அடித்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் கேகேஆர் அணியின் பேட்டிங்கின்போது நடந்த ஒரு சம்பவம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கேகேஆர் அணி 218 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை எட்டியதற்கு கடைசி நேரத்தில் ரசல் அடித்த அடிதான் காரணம். 17 ஓவர் வரை கேகேஆர் அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 3 ஓவரில் 55 ரன்களை குவித்தது. அதற்கு ரசலின் அதிரடிதான் காரணம். 

ஆண்ட்ரூ டை வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசிய ரசல், ஷமி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி மிரட்டினார். ஆனால் 17வது ஓவரிலேயே ரசல் அவுட். அவரது அதிர்ஷ்டம் அது நோ பாலானது. ரசல் அதிரடியாக ஆடக்கூடிய வீரர். ஆனால் அவரது பலவீனம் யார்க்கர்கள். அதை அறிந்து 17வது ஓவரில் ஷமி தொடர்ச்சியாக யார்க்கர்களாக வீசி ரசலை கட்டுப்படுத்தினார். 17வது ஓவரின் கடைசி பந்தை ஷமி அபாரமான யார்க்கராக வீசினார். அந்த யார்க்கரின் கிளீன் போல்டானார் ரசல். ஆனால், 30 யார்டு வட்டத்திற்குள் 4 வீரர்கள் நிற்கவேண்டிய வேளையில் வெறும் 3 ஃபீல்டர்கள் மட்டுமே நின்றதால் அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து அஷ்வின் அதிர்ச்சியடைந்தார். அபாரமான யார்க்கரை வீசி ரசலை அவுட்டாக்கிய ஷமியும் அதிருப்தியடைந்தார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ரசல், கடைசி 3 ஓவர்களில் அடித்து நொறுக்கிவிட்டார். ஆட்டத்தின் திருப்புமுனையே அந்த நோ பால் தான். இல்லையென்றால் ரசல் 17வது ஓவரிலேயே வெளியேறியிருப்பார். கொல்கத்தா அணி அதிகபட்சம் 200 ரன்களோ அல்லது அதற்குள்ளாகவோத்தான் எடுத்திருக்கும்.
 

click me!