மாயாஜால ஸ்பின்னர்னு சொன்னீங்களேப்பா.. இப்படி மானாவாரியா அடிச்சுட்டு நொறுக்கிட்டாங்களே

By karthikeyan VFirst Published Mar 28, 2019, 10:12 AM IST
Highlights

ஐபிஎல்லில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 
 

ஐபிஎல்லில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, உத்தப்பா - ராணா ஆகியோரின் பொறுப்பான அரைசதம் மற்றும் கடைசி நேர ரசலின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது. 

219 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் கெய்ல் ஆகியோர் முறையே 1 மற்றும் 20 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு மயன்க் அகர்வால் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் கான் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பின்னர் டேவிட் மில்லரும் மந்தீப் சிங்கும் அதிரடியாக ஆடி கடைசி வரை போராடினர். எனினும் இலக்கு மிகவும் அதிகம் என்பதால் அவர்களால் எட்டமுடியவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்கள் மட்டும்தான் அடித்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் பஞ்சாப் அணியால் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் சுனில் நரைன். மாயாஜால ஸ்பின்னர் என்று வருண் சக்கரவர்த்தியை எட்டரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. இதையடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி ஆடிய முதல் போட்டியில் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அணியில் இருந்தார். முதல் ஓவரை பஞ்சாப் அணி சார்பில் ஷமி வீச, இரண்டாவது ஓவரை வருணிடம் கொடுத்தார் கேப்டன் அஷ்வின். 

வருண் சக்கரவர்த்தி வீசிய அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்களை குவித்தார் சுனில் நரைன். அந்த ஓவரில் லின் அடித்த சிங்கிளோடு சேர்த்து மொத்தம் 25 ரன்கள் அடிக்கப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாயாஜால ஸ்பின்னர் என்ற பெயரில் கெத்தாக பந்துவீச வந்த வருணின் பவுலிங்கை மானாவாரியாக அடித்தார் சுனில் நரைன். அதன்பின்னர் சுனில் நரைன் ஆட்டமிழந்த பிறகு 7வது ஓவரை மீண்டும் வருணிடம் கொடுத்தார் அஷ்வின். அந்த ஓவரில் உத்தப்பா இரண்டு பவுண்டரிகளை அடித்தார். மாயாஜால ஸ்பின்னர் என்ற அடையாளத்தையே ஒழித்துக்கட்டும் அளவிற்கு அடித்தனர். அதன்பிறகு 15வது ஓவரை வீசிய வருண், ஒருவழியாக ராணாவை அவுட்டாக்கி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 

வருணின் பவுலிங்கை இரண்டாவது ஓவரிலேயே தாறுமாறாக அடித்தபோதே கொல்கத்தா அணி உத்வேகமடைந்தது. அதே உத்வேகத்துடன் இறுதிவரை ஆடியது. அந்த வகையில் நரைனின் ஆட்டம் அந்த அணியின் அடித்தளம். 
 

click me!