ஆர்சிபி அணி கோலி, டிவில்லியர்ஸலாம் தூக்கிட்டு இத பண்ணாலே போதும்.. ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கிடலாம்

By karthikeyan VFirst Published Apr 3, 2019, 12:42 PM IST
Highlights

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணிக்கு இந்த சீசனும் மிக மோசமாகவே அமைந்துள்ளது. 
 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணிக்கு இந்த சீசனும் மிக மோசமாகவே அமைந்துள்ளது. 

ஐபிஎல்லில் இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் நடந்துவருகிறது. இந்த 11 சீசன்களில் 3 முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2009ம் ஆண்டு கும்ப்ளே தலைமையிலான அணியும் 2011ம் ஆண்டு டேனியல் வெட்டோரி தலைமையிலான ஆர்சிபி அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறின. ஆனால் அந்த இரண்டு முறையும் கோப்பையை தவறவிட்டது ஆர்சிபி அணி. 

2013ம் ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்றார். கோலியின் கேப்டன்சியில் பெரிதாக ஒன்றுமே சாதிக்கவில்லை ஆர்சிபி அணி. 2016ம் ஆண்டு மட்டும் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதில், சன்ரைசர்ஸிடம் தோற்று கோப்பையை நழுவவிட்டது. 

அதைத்தவிர விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு வேறு எந்த சீசனும் நன்றாக அமையவில்லை. கடந்த சீசன் படுமோசம் என்றால், இந்த சீசன் அதைவிட மோசமாக உள்ளது. முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணி, தொடர்ச்சியாக முதல் நான்கு போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனிமேல் இதிலிருந்து மீண்டு வருவது என்பதெல்லாம் நடக்காத விஷயம். அதனால் இந்த சீசனிலும் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது சந்தேகம் தான். 

விராட் கோலியின் நேர்த்தியற்ற மோசமான கேப்டன்சியும் அந்த அணியின் தோல்வி முகத்திற்கு காரணம். அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் கோர் வீரர்களாக கோலியும் டிவில்லியர்ஸும் மட்டுமே உள்ளனர். சில சீசன்களாக சாஹல் உள்ளார். இவர்களை தவிர மற்ற வீரர்களை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்கிறது ஆர்சிபி அணி. அதனால் நம்ம டீம்; நாம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உணர்வு அந்த அணியிடம் இல்லாதது அப்பட்டமாக தெரிகிறது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளிடம் உள்ள தீவிர உணர்வும் அணி மீதான பற்றும் ஆர்சிபி அணி வீரர்களுக்கு அந்த அணி மீது இல்லை. 

விராட் கோலியையும் டிவில்லியர்ஸையும் மட்டுமே நம்பி இருக்கிறது. சொல்லப்போனால் கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், கருண் நாயர், ராபின் உத்தப்பா, மனீஷ் பாண்டே, கிருஷ்ணப்பா கௌதம், ஷ்ரேயாஸ் கோபால், பிரசித் கிருஷ்ணா, ஸ்டூவர்ட் பின்னி என மற்ற அணிகளில் ஆடும் கர்நாடக வீரர்கள் தான் அந்தந்த அணிகளுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் நாயகர்களாக திகழ்கின்றனர். 

கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரை அதிரடியாக தூக்கிவிட்டு சொந்த மண் வீரர்களை உள்ளடக்கிய அணியை எடுத்து, அவர்களுடன் சில தரமான வெளிநாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து களமிறக்கினாலே அந்த அணி வெற்றிகரமாக திகழ்வதற்கான வாய்ப்புள்ளது. 

அதைவிடுத்து ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு வீரரை நம்பிக்கையுடன் ஏலத்தில் எடுத்து, அந்த வீரரை பெரியளவில் நம்பி மோசம் போவதே ஆர்சிபி அணிக்கு வேலையாக போயிற்று. இந்த சீசனில் ஹெட்மயர் மீது பெரிய நம்பிக்கை வைத்து எடுத்தது. அவர் 4 போட்டிகளில் ஒன்றில் கூட சோபிக்கவில்லை. இதுபோன்ற வெளிநாட்டு வீரர்களையும் கோலியையும் பெரிதாக நம்புவதை விட அந்த அணி சொந்த மண் வீரர்களை வைத்து ஆடிவிட்டுப்போகலாம். அந்தளவிற்கு திறமையான வீரர்கள் கர்நாடகாவில் உள்ளனர். கர்நாடக வீரர்கள் தான் மற்ற அணிகளில் சோபிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!