முதல் வெற்றிக்காக கடும் போராட்டம்.. கடைசி ஓவரில் ஆர்சிபியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!! மீண்டும் மண்ணை கவ்விய ஆர்சிபி

Published : Apr 03, 2019, 10:00 AM IST
முதல் வெற்றிக்காக கடும் போராட்டம்.. கடைசி ஓவரில் ஆர்சிபியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!! மீண்டும் மண்ணை கவ்விய ஆர்சிபி

சுருக்கம்

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது.   

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. 

இரு அணிகளுமே முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியதால், முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, ஆர்சிபியை பேட்டிங் செய்ய பணித்தார். 

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும் பார்த்திவ் படேலும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கினர். விராட் கோலி சற்று மந்தமாக ஆடினாலும் பார்த்திவ் படேல் அடித்து ஆடினார். பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்தனர். 7வது ஓவரில் கோலி - பார்த்திவ் ஜோடியை ஷ்ரேயாஸ் கோபால் பிரித்தார். 

ரிஸ்ட் ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபாலின் பந்தில் கோலி கிளீன் போல்டானார். ஷ்ரேயாஸ் தனது அடுத்த ஓவரில் டிவில்லியர்ஸையும் அதற்கடுத்த ஓவரில் ஹெட்மயரையும் வீழ்த்தினார். 7வது ஓவர் முதல் 12வது ஓவர் வரை ஆர்சிபி அணியின் ரன்ரேட்டும் வெகுவாக குறைந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பார்த்திவ் படேல் தனது அதிவேக அரைசத்தை பதிவு செய்தார். 41 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து பார்த்திவ் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மார்கஸ் ஸ்டோய்னிஸும் மொயின் அலியும் இணைந்து சில ஷாட்டுகளை ஆடி, அணியின் ஸ்கோரை 158 ஆக்கினர். 

159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ரஹானே - பட்லர் தொடக்க ஜோடி, அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். ரஹானே 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பட்லருடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடிய பட்லர், இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். 59 ரன்கள் அடித்து பட்லர் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஸ்மித்தும் டிரிபாதியும் இணைந்து இலக்கை நோக்கி சென்றனர். இலக்கை நெருங்கும் நேரத்தில் 19வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்மித் ஆட்டமிழந்தார். 

கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு வெறும் 5 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 5வது பந்தில் சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற செய்தார் திரிபாதி. இதையடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேநேரத்தில் தொடர்ச்சியாக 4 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதோடு ஒரு அணியாக துவண்டு போயுள்ளது ஆர்சிபி. 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்