RR vs RCB: விண்டேஜ் உத்தப்பா கம்பேக்.. ஸ்டீவ் ஸ்மித் அதிரடி அரைசதம்.. ஆர்சிபிக்கு மிகச்சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published Oct 17, 2020, 5:57 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவரில் 177 ரன்கள் அடித்து 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லரும் ராபின் உத்தப்பாவும் களமிறங்கினர். இந்த சீசனில் இதுவரை மிடில் ஆர்டரில் இறக்கப்பட்டு வந்த உத்தப்பா, இந்த போட்டியில் தான் முதல் முறையாக ஓபனிங்கில் இறங்கினார்.

ராபின் உத்தப்பா தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். உத்தப்பா ஒருமுனையில் அடித்து ஆடியதால் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் பவர்ப்ளேயில் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசிய உத்தப்பா, அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார்.

கடந்த சில சீசன்களாகவே பெரியளவில் ஆடிராத உத்தப்பா, இந்த போட்டியில், அவரது கெரியரின் ஆரம்பத்தில் ஆடியதை போல, நடந்து வந்தெல்லாம் ஷாட்டுகளை ஆடி அசத்தினார். 22 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 41 ரன்கள் அடித்து சாஹலின் பந்தில் ஆட்டமிழக்க, அதற்கடுத்த பந்திலேயே சஞ்சு சாம்சனும் 9 ரன்களுக்கு நடையை கட்டியதால், பட்லர் மற்றும் ஸ்மித்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. செட்டில் பேட்ஸ்மேன் உத்தப்பா அவுட்டானதால் ரன் வேகமும் குறைந்தது.

பட்லர் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்மித் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 57 ரன்கள் அடித்த நிலையில் கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். ராகுல் டெவாட்டியா 11 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 19 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 177 ரன்களை அடித்து, 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!