17வது ஓவரிலேயே சோலியை முடித்த மும்பை இந்தியன்ஸ்.. கேகேஆரை வீழ்த்தி மீண்டும் முதலிடம்

By karthikeyan VFirst Published Oct 16, 2020, 11:22 PM IST
Highlights

கேகேஆர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 புள்ளிகளுடன் மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆனால் கேகேஆர் அணி பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. கேகேஆர் அணியின் தொடக்க வீரர் திரிபாதி 7 ரன்களிலும், நிதிஷ் ராணா 5 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆண்ட்ரே ரசலுக்கு அருமையான பவுன்ஸர் போட்டு 12 ரன்களில் வீழ்த்தினார் பும்ரா.

ரசல் அவுட்டாகும்போது, கேகேஆர் அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் வெறும்  61 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதன்பின்னர் மோர்கனும் கம்மின்ஸும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடி 20 ஓவர் வரை ஆடி அணியை 148 ரன்கள் எட்டவைத்து, கரைசேர்த்தனர்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கம்மின்ஸ் 36 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 53 ரன்களும் மோர்கன் 29 பந்தில் தலா 2 பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் 39 ரன்கள் அடித்தார். 

இதையடுத்து 149 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் குயிண்டன் டி காக் ஆகிய இருவரும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்தனர். டி காக் ஆரம்பம் முதலே அடித்து ஆட, ரோஹித் சர்மா மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நிதானமாக ஆடினார். 

முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் கேகேஆர் அணி திணறியது. ஒருவழியாக கடுமையாக போராடி, 11வது ஓவரில் ரோஹித்தை 35 ரன்களுக்கு வீழ்த்தினர். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் டி காக்கும் இணைந்து 94 ரன்களை குவித்தனர். சூர்யகுமார் யாதவ் 10 ரன்களுக்கு அவுட்டாக, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாச, கடைசி வரை களத்தில் நின்று தனது பணியை செவ்வனே செய்தார் டி காக்.

தொடக்கம் முதலே கேகேஆர் பவுலிங்கை பொளந்துகட்டிய டி காக், 44 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்தார். டி காக்கின் அதிரடியால் 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 12 புள்ளிகளுடன் மீண்டும் டெல்லி கேபிடள்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.
 

click me!