கடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்..! சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Sep 22, 2020, 11:46 PM IST
Highlights

சிஎஸ்கே அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல் 13வது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ராஜஸ்தான் ராயல்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன், அறிமுக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினார். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த சஞ்சு சாம்சன், ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்தார்.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் சிறியது என்பதால், ஜடேஜா, பியூஷ் சாவ்லா ஆகியோரின் பவுலிங்கை பொளந்துகட்டினார் சஞ்சு சாம்சன். ஜடேஜா வீசிய 7வது ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசிய சாம்சன், சாவ்லா வீசிய 8வது ஓவரில் 3 சிக்ஸர்களையும் விளாசினார். சாவ்லாவின் அந்த ஓவரில் ஸ்மித்தும் ஒரு சிக்ஸர் அடித்தார். மீண்டும் சாவ்லா வீசிய 10வது ஓவரில் ஸ்மித் 2 சிக்ஸர்களையும் சாம்சன் ஒரு சிக்ஸரையும் அடிக்க, 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 119 ரன்களை குவித்துவிட்டது.

சஞ்சு சாம்சன் ஆடிய விதத்தில், என்ன செய்வதென்று தெரியாமல் தல தோனியே நிராயுதபாணியாக நின்றார். போகிற போக்கில் போகட்டும்; பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கே தோனி சென்றுவிட்டார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சாம்சன், லுங்கி இங்கிடி வீசிய இன்னிங்ஸின் 12வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

சாம்சன், 32 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் மில்லர்(0), உத்தப்பா(5), ராகுல் டெவாட்டியா(10), ரியான் பராக்(6) என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அரைசதம் அடித்த ஸ்மித், கடைசி வரை களத்தில் நின்று நன்றாக ஃபினிஷிங் செய்ய வேண்டும் என நினைத்தார். ஆனால் ஸ்மித் 47 பந்தில் தலா 4 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சாம்சன் ஆடிய ஆட்டத்திற்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போன வேகத்திற்கு பெரிய ஸ்கோர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஓவரில் 186 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் யாருமே எதிர்பார்த்திராத விதமாக லுங்கி இங்கிடி வீசிய கடைசி ஓவரில் ஜோஃப்ரா ஆர்சச்ர், 4 சிக்ஸர்களை விளாசினார். அதில் 2 நோ பால்களும் கூட. மேலும் ஒரு வைடையும் இங்கிடி வீசினார். எனவே கடைசி ஓவரில் மட்டும் ராஜஸ்தான் அணி 30 ரன்களை விளாச, 20 ஓவரில் 216 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்து, 217 ரன்கள் என்ற கடின இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.

217 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சனும் முரளி விஜயும் ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தையே அமைத்தனர். ஆனால் செட்டில் ஆகி நல்ல ஷாட்டுகள் கனெக்ட் ஆக தொடங்கிய மாத்திரத்திலேயே ஷேன் வாட்சன், 21 பந்தில் 33 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராகுல் டெவாட்டியாவின் சுழலில் போல்டாகி சென்றார்.

முரளி விஜய் மந்தமாக ஆடி 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து சாம் கரன் 17 ரன்களிலும், அறிமுக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் பந்திலேயே ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி மீதான அழுத்தம் அதிகரித்தது. கேதர் ஜாதவும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, டுப்ளெசிஸுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார்.

13.4 ஓவரில் சிஎஸ்கே அணி 114 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், நெருக்கடியான சூழலில் டுப்ளெசிஸுடன் தோனி ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிவந்த டுப்ளெசிஸ், உனாத்கத் வீசிய 17வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி அரைசதம் கடந்ததுடன், 18வது ஓவரில் ஒரு சிக்ஸரும் 19வது ஓவரில் ஒரு சிக்ஸரும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தி, வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை சிஎஸ்கேவிற்கு அளித்தார். ஆனால் 19வது ஓவரின் ஐந்தாவது பந்தை அபாரமாக பவுன்ஸராக வீசி, டுப்ளெசிஸை வீழ்த்தினார் ஆர்ச்சர்.

இதையடுத்து கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றிக்கு வாய்ப்பே இல்லையென்றாலும், டாம் கரன் வீசிய கடைசி ஓவரில் தோனி 3 சிக்ஸர்களை விளாசினார். சிஎஸ்கே அணி 20 ஓவரில் 200 ரன்களை குவித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் போட்டியிலேயே வலுவான சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
 

click me!