அறிமுக போட்டியிலயே 11 ஆண்டுகால சாதனையை முறியடித்த அல்ஸாரி!! சன்ரைசர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Apr 7, 2019, 10:03 AM IST
Highlights

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அணிகளுக்கு இடையேயான போட்டி நாளுக்குநாள் கடுமையாகிவருகிறது. 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அணிகளுக்கு இடையேயான போட்டி நாளுக்குநாள் கடுமையாகிவருகிறது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். டெத் ஓவர்களில் பொல்லார்டு அடித்து ஆடி அணியின் ரன்னை உயர்த்தினார். பொல்லார்டு 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் அடித்தார். பொல்லார்டின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி 136 ரன்கள் எடுத்தது. 

வார்னர், பேர்ஸ்டோ, விஜய் சங்கர், மனீஷ் பாண்டே, யூசுப் பதான் என நல்ல பேட்டிங் ஆர்டரை கொண்ட சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த இலக்கு மிகவும் குறைவுதான். ஆனால் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பை தகர்க்கும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அல்ஸாரி பந்துவீசி ஆட்டத்தையே தலைகீழாக திருப்பினார். 

மலிங்கா இல்லாததால் நேற்றைய போட்டியில் அல்ஸாரி ஜோசப் அணியில் எடுக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதுதான் முதல் போட்டி. அறிமுக போட்டியிலேயே அசத்திவிட்டார். அபாயகரமான தொடக்க ஜோடியான பேர்ஸ்டோ - வார்னர் ஜோடியை மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்திலேயே வீழ்த்திவிட்டது. பேர்ஸ்டோவை 16 ரன்களில் ராகுல் சாஹரும் வார்னரை அல்ஸாரி ஜோசப்பும் வீழ்த்தினர். 

விஜய் சங்கர், மனீஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இவர்களில் விஜய் சங்கரை அல்ஸாரி வீழ்த்தினார். விக்கெட்டுகள் விழ விழ சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. அதை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி பவுலர்கள் அபாரமாக பந்துவீசி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது நபியை பும்ரா வீழ்த்த, தீபக் ஹூடா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் ஆகியோரை அல்ஸாரி வீழ்த்தினார். 

அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் அபார வெற்றிக்கு வழிவகுத்தார். அல்ஸாரியின் அபாரமான பவுலிங்கில் சன்ரைசர்ஸ் அணி வெறும் 96 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

அல்ஸாரி வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் சிறந்த பவுலிங். இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு தன்வீர் 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் 11 ஆண்டுகளாக சிறந்த பவுலிங்காக இருந்தது. அறிமுக போட்டியிலேயே அந்த சாதனையை முறியடித்துள்ளார் அல்ஸாரி.
 

click me!