வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனியர் வீரருக்கு அடிச்சது அதிர்ஷ்டம்.. மீண்டும் டெல்லி அணியில் இணைகிறார்

By karthikeyan VFirst Published Apr 12, 2019, 4:02 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த சீசனில் கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. அதனால் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருந்தும் கூட, கங்குலியை ஆலோசகராக நியமித்துள்ளது. பாண்டிங்கும் கங்குலியும் இணைந்து டெல்லி கேபிடள்ஸ் அணியை வழிநடத்துகின்றனர்.
 

ஐபிஎல்லில் 11 சீசன்கள் முடிந்து 12வது சீசன் நடந்துவருகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் மற்றும் ஆர்சிபி ஆகிய மூன்று அணிகளும் இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கின. 

இவற்றில் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஓரளவிற்கு ஆடிவருகின்றன. ஆனால் ஆர்சிபி அணிதான் ஆடிய 6 போட்டிகளிலும் தோற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலையில் உள்ளது. 

டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த சீசனில் கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. அதனால் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருந்தும் கூட, கங்குலியை ஆலோசகராக நியமித்துள்ளது. பாண்டிங்கும் கங்குலியும் இணைந்து டெல்லி கேபிடள்ஸ் அணியை வழிநடத்துகின்றனர்.

அந்த அணியின் ஹர்ஷல் படேல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயத்தால் இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், அந்த அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பேட்ஸ்மேனான மனோஜ் திவாரி இணைவார் என தெரிகிறது. இவர் ஏற்கனவே 5 சீசன்களில் டெல்லி அணிக்காக ஆடியுள்ளார். கேகேஆர், புனே அணிகளுக்காகவும் ஆடியுள்ள மனோஜ் திவாரி, கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் இருந்தார். பஞ்சாப் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட மனோஜ் திவாரியை இந்த சீசனில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதனால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார் மனோஜ் திவாரி. தன்னை ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது தெரியவே இல்லை என்று தனது அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு மனோஜ் திவாரி அழைத்து செல்லப்பட உள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார். மனோஜ் திவாரியும் அதை உறுதிப்படுத்தியுள்ளார். மனோஜ் திவாரி டெல்லி அணியில் இணையும் வாய்ப்பு இருந்தாலும் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 
 

click me!