எதிரணியை மனதார பாராட்டிய தோனி.. வீரரை விட்டுக்கொடுக்காத தலைமை பண்பு!! பெஸ்ட் கேப்டன்னா அது தோனிதான்

By karthikeyan VFirst Published Apr 12, 2019, 3:07 PM IST
Highlights

152 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கே அணியை எளிதாக எட்டவிடாமல் கடைசி பந்துவரை கடுமையாக போராடி கடும் நெருக்கடி கொடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியை 151 ரன்களுக்கு சுருட்டிய சிஎஸ்கே அணி, 152 ரன்கள் என்ற இலக்கை கடைசி பந்தில் எட்டி திரில் வெற்றி பெற்றது. 

152 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கே அணியை எளிதாக எட்டவிடாமல் கடைசி பந்துவரை கடுமையாக போராடி கடும் நெருக்கடி கொடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கடைசி ஓவரில் அம்பயர் நோ பால் கொடுக்க, லெக் அம்பயர் இல்லை என்று மறுத்துவிட்டதால், தோனி களத்திற்குள் சென்று அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்தது கடும் சர்ச்சையை கிளப்பியது. 

தோனியின் செயலுக்கு பல முன்னாள் வீரர்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். தோனி செய்தது ஐபிஎல் விதிகளை மீறிய செயல் என்பதால் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தோனி மீது என்னதான் விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் ஒரு சிறந்த கேப்டன் என்பதை போட்டிக்கு பிந்தைய பேட்டியின் போது மீண்டும் நிரூபித்தார். 

போட்டிக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, இது அருமையான ஒரு போட்டி. ராஜஸ்தான் அணிக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். இந்த ஆடுகளத்திற்கு தேவையான ரன்னை விட சற்று குறைவாக அடித்துவிட்டார்கள். எனினும் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கும் கடும் நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தினார்கள். கடைசிவரை நெருக்கடியிலேயே வைத்திருந்தார்கள் என்று ராஜஸ்தான் அணியின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். 

ராஜஸ்தான் அணியை இன்னும் குறைவான ரன்களுக்குள் சுருட்டியிருக்கலாம். ஆனால் ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதுகுறித்து தோனியிடம் கேட்டபோது, தனிப்பட்ட முறையில் வீரர்கள் செய்யும் தவறை தோல்விக்கு காரணமாக காட்ட முடியாது. போட்டியில் தோற்றால் ஒரு தனிப்பட்ட வீரர் மீது குற்றம்சுமத்த முடியாது. ஒட்டுமொத்த அணியும்தான் பொறுப்பேற்க வேண்டும். அதனால் தனிப்பட்ட வீரர் மீது பழிபோட முடியாது என்று ஒரு தலைவனுக்கு உரிய உயரிய பண்புடன் கூறினார். 
 

click me!