தனி ஒருவனாக கடைசி நேரத்தில் காட்டடி அடித்த ஆண்ட்ரே ரசல்.. கேகேஆர் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 24, 2019, 8:20 PM IST
Highlights

கடைசி நேரத்தில் ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கேகேஆர் அணி.
 

கடைசி நேரத்தில் ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கேகேஆர் அணி.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டியில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும் ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். தொடக்கம் முதலே வார்னர் அதிரடியாக ஆடினார். இருவரும் இணைந்து சிறந்த அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 118 ரன்களை குவித்தனர். பேர்ஸ்டோ 39 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகும் தொடர்ந்து அதிரடியாக ஆடிய வார்னர் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களை குவித்து சதமடிக்க முடியாமல் ரசலின் பந்தில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரன்ரேட் சற்று சரிந்தாலும் கடைசி ஓவர்களில் விஜய் சங்கர் அடித்து ஆடி 24 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 181 ரன்களை குவித்தது.

182 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு நிதிஷ் ராணாவுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினார். உத்தப்பாவை 35 ரன்களில் சித்தார்த் கவுல் போல்டாக்கி அனுப்பினார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக் வெறும் 2 ரன்களில் வெளியேறினார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய நிதிஷ் ராணா அரைசதம் கடந்து அபாரமாக ஆடினார். எனினும் கடைசிவரை களத்தில் நிற்கவிடாமல் அவரை 68 ரன்களில் வெளியேற்றினார் ரஷீத் கான்.

அந்த விக்கெட்டுக்கு பிறகு கேகேஆர் அணி மீதான நெருக்கடி அதிகரித்தது. 17வது ஓவரை சிறப்பாக வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் புவனேஷ்வர் குமார். அதன்பிறகு சித்தார்த் கவுல் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசினார் ரசல். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் குவிக்கப்பட்டன. புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரையும் அடித்து நொறுக்கினார் ரசல். அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இதையடுத்து கடைசி ஓவரில் கேகேஆரின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் இளம் வீரர் ஷுப்மன் கில் 2 சிக்ஸர்களை விரட்டி கேகேஆர் அணியை வெற்றி பெற செய்தார்.

ஆண்ட்ரே ரசலின் கடைசி நேர அதிரடியால் கேகேஆர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

click me!