அப்போ நான் சின்ன பையன்.. அந்த வயசுல அவரு அடிச்ச அடியை பார்த்து மிரண்டே போயிட்டேன் - ராகுல்

By karthikeyan VFirst Published Mar 22, 2019, 5:17 PM IST
Highlights

இந்த சீசனிலும் கிறிஸ் கெய்லுடன் இணைந்து வெளுத்து வாங்கும் முனைப்பில் உள்ளார் ராகுல். ஸ்வீப், ஃபிளிக், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் என பல ஷாட்டுகளை அடித்து மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை கடந்த சீசனில் பறக்கவிட்டார். 
 

ஐபிஎல் 12வது சீசன் வரும் 23ம் தேதி(நாளை) தொடங்குகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

ஐபிஎல்லில் கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய ராகுல், இந்த சீசனிலும் பஞ்சாப் அணிக்காக ஆடுகிறார். கடந்த சீசன் ராகுலுக்கு சிறப்பானதாக அமைந்தது. ராகுலின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான சீசனாக அமைந்தது. கடந்த சீசனில் மட்டும் 650 ரன்களை குவித்தார் ராகுல். 

இந்த சீசனிலும் கிறிஸ் கெய்லுடன் இணைந்து வெளுத்து வாங்கும் முனைப்பில் உள்ளார் ராகுல். ஸ்வீப், ஃபிளிக், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் என பல ஷாட்டுகளை அடித்து மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை கடந்த சீசனில் பறக்கவிட்டார். 

12வது சீசன் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த சீசனிலும் சிறப்பாக ஆடும் முனைப்பில் உள்ள ராகுல், தனக்கு உத்வேகமாக அமைந்த ஒரு இன்னிங்ஸ் குறித்து மனம் திறந்துள்ளார். அதுகுறித்து பேசிய ராகுல், என்னுடைய 16வது வயதில் நடந்த அந்த போட்டியை சின்னசாமி மைதானத்தில் நான் பார்த்தேன். ஐபிஎல்லின் முதல் போட்டி அது. முதல் போட்டியிலேயே 158 ரன்களை விளாசி மிரட்டினார் மெக்கல்லம். மெக்கல்லம் ஆடிய அந்த இன்னிங்ஸ் மாதிரியான ஒரு இன்னிங்ஸை அதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை. ஐபிஎல் தொடங்கியதும் முதல் போட்டியிலேயே மிரட்டலாக ஆடினார். என்னை போன்ற இளம் வீரர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத இன்னிங்ஸ் அது. அதன்பிறகு நான் பயிற்சி எடுக்கும்போது அதுமாதிரி சிக்ஸர்களை அடிப்பேன். ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் ஷாட்டுகளையும் பயிற்சி செய்தேன். ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத மற்றும் மிகவும் பிடித்தமான இன்னிங்ஸ்களில் முதன்மையானது அதுதான் என்று ராகுல் தெரிவித்துள்ளார். 

2008ல் ஐபிஎல் தொடங்கியதும் முதல் போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான ஆர்சிபி அணியும் கங்குலி தலைமையிலான கேகேஆர் அணியும் மோதிய போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் மெக்கல்லம் அபாரமாக ஆடி 10 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் 73 பந்துகளில் 158 ரன்களை குவித்தார். அந்த சாதனை 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் கெய்லால் முறியடிக்கப்பட்டது. இப்போதுவரைக்கும் ஐபிஎல் வரலாற்றில் மெக்கல்லம் அடித்த ஸ்கோர்தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். 
 

click me!