RRஐ வீழ்த்தி KKR அபார வெற்றி..புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து நேரடியாக 4ம் இடத்திற்கு முன்னேறிய கேகேஆர்

By karthikeyan VFirst Published Nov 1, 2020, 11:42 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கேகேஆர் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 4ம் இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர் நிதிஷ் ராணா, ஆர்ச்சர் வீசிய இன்னிங்ஸின் 2வது பந்திலேயே(ராணா எதிர்கொண்ட முதல் பந்து) கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் கில்லும் திரிபாதியும் இணைந்து பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கில் மற்றும் திரிபாதியின் அதிரடியால் பவர்ப்ளேயில் கேகேஆருக்கு 55 ரன்கள் கிடைத்தது.

ராகுல் டெவாட்டியா வீசிய 9வது ஓவரில் கில் 36 ரன்களுக்கு அவுட்டாக, அதே ஓவரிலேயே சுனில் நரைனை டக் அவுட்டாக்கினார் டெவாட்டியா. 12வது ஓவரில் ராகுல் திரிபாதியை 39 ரன்களுக்கு  ஷ்ரேயாஸ் கோபால் வீழ்த்த, அடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக்கை டெவாட்டியா டக் அவுட்டாக்கினார். 

12.3 ஓவரில் 99 ரன்களுக்கு கேகேஆர் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் களத்திற்கு வந்த ஆண்ட்ரே ரசல் 11 பந்தில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கேப்டன் மோர்கன் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். ஸ்டோக்ஸ் வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசிய மோர்கன், கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸருடன் இன்னிங்ஸை முடித்தார்.

மோர்கன் 35 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்தார். மோர்கனின் அதிரடியால் 20 ஓவரில் 191 ரன்களை குவித்த கேகேஆர் அணி, 192 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இலக்காக நிர்ணயித்தது.

192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா, கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி சிக்ஸருடன் தொடங்கினார். அந்த ஓவரில் பென் ஸ்டோக்ஸும் இன்னொரு சிக்ஸர் விளாச, முதல் ஓவரிலேயே 19 ரன்களை குவித்தது ராஜஸ்தான் அணி.

ஆனால் அதன்பின்னர் சுதாரித்துக்கொண்ட கம்மின்ஸ், அதன்பின்னர் அருமையாக வீசினார். முதல் ஒவரின் கடைசி பந்தில் உத்தப்பாவை வீசிய கம்மின்ஸ், தனது அடுத்த ஓவரில் ஸ்டோக்ஸ்(18) மற்றும் ஸ்மித்தை(4) வீழ்த்தினார். அடுத்த ஓவரில் ஷிவம் மாவி சஞ்சு சாம்சனை ஒரு ரன்னில் வெளியேற்ற, கம்மின்ஸ் தனது அடுத்த ஓவரில் ரியான் பராக்கை டக் அவுட்டாக்கி அனுப்ப, பவர்ப்ளேயிலேயே ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது ராஜஸ்தான் அணி.

அதன்பின்னர் நம்பிக்கையளித்த பட்லரை 35 ரன்களுக்கும் டெவாட்டியாவை 31 ரன்களுக்கும் வருண் சக்கரவர்த்தி வீழ்த்த, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி வெறும் 131 ரன்கள் மட்டுமே அடிக்க, 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கேகேஆர் அணி புள்ளி பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியது. 

சன்ரைசர்ஸ் அணி கடைசி போட்டியில் மும்பை அணியிடம் தோற்கும் பட்சத்தில் கேகேஆர் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டியில் ஒரு அணி படுமோசமாக தோற்றாலும், கேகேஆர் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும்.
 

click me!