கேகேஆரிடம் மண்டியிட்டு சரணடைந்த டெல்லி கேபிடள்ஸ்..! 5 விக்கெட் வீழ்த்திய வருண் ஆட்டநாயகன்

By karthikeyan VFirst Published Oct 24, 2020, 8:17 PM IST
Highlights

கேகேஆருக்கு எதிரான போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.
 

கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, 7.2 ஓவரில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷுப்மன் கில் 9 ரன்களுக்கும் திரிபாதி 13 ரன்களுக்கும் தினேஷ் கார்த்திக் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற நிதிஷ் ராணாவுடன், சுனில் நரைன் ஜோடி சேர்ந்தார். சுனில் நரைன் களத்திற்கு வந்த முதல் பந்திலிருந்தே அடித்து ஆட தொடங்கினார். கடும் மோசமான நிலையில் இருந்த கேகேஆர் அணியை சரிவிலிருந்து மீட்டு நல்ல நிலைக்கு அழைத்து சென்றார் சுனில் நரைன்.

அஷ்வின் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஓவர்களில் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசி மளமளவென ஸ்கோரை உயர்த்தினார் சுனில் நரைன். அஷ்வின் வீசிய 8வது ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசிய நரைன், தேஷ்பாண்டே வீசிய 9வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். அதற்கடுத்தடுத்த ஓவர்களிலும் நரைன்  மற்றும் ராணா ஆகிய இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, ராணா அரைசதம் கடக்க, அவரை தொடர்ந்து 24 பந்தில் நரைனும் அரைசதம் அடித்தார்.

7.2 ஓவரில் 42 ரன்கள் என்ற நிலையில் இருந்த கேகேஆர் அணி, நரைன் மற்றும் ராணாவின் அதிரடியால் 16.4 ஓவரில் 157 ரன்கள் என்ற நிலையை எட்டியது. நரைனும் ராணாவும் இணைந்து 54 பந்தில் 115 ரன்களை குவித்தனர். 32 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களுக்கு ரபாடாவின் பந்தில் 17வது ஓவரில் நரைன் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ராணா, 52 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 81 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் கேகேஆர் அணி 194 ரன்களை குவித்து 195 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்தது..

195 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக தவானும் ரஹானேவும் களமிறங்கினர். பாட் கம்மின்ஸ் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ரஹானே ஆட்டமிழக்க, தொடர்ச்சியாக 2 சதமடித்த தவானையும் ஆறு ரன்களுக்கு வீழ்த்தினார் கம்மின்ஸ்.

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து விக்கெட்டை இழந்துவிடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், ரன்வேகம் உயரவேயில்லை. கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா, நாகர்கோட்டி ஆகியோர் பவர்ப்ளேயில் நன்றாக வீசி கட்டுப்படுத்த, பவர்ப்ளேவிற்கு பின்னர் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலரான ஃபெர்குசன், அந்த பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு, டெல்லி கேபிடள்ஸின் ரன்வேகத்தை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். 

கிட்டத்தட்ட பந்துக்கு நிகரான ஸ்கோரையே தொடர்ந்து வந்த டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு 10 ஓவருக்கு மேல் நெருக்கடி அதிகரிக்க, களத்திற்கு வந்தது முதலே பெரிய ஷாட்டுகளை நல்ல ஃப்ளோவில் ஆடமுடியாமல், தனது வழக்கமானன் இன்னிங்ஸை ஆடாமல் மந்தமாக ஆடிவந்த ரிஷப் பண்ட் 33 பந்தில் 27 ரன்களுக்கு வருண் சக்கரவர்த்தியின் சுழலில் வீழ்ந்தார்.

12வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய வருண், முதல் ஓவரிலேயே ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கடுத்த தனது 2வது ஓவரில்(இன்னிங்ஸின் 14வது ஓவர்), ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹெட்மயர் ஆகிய 2 அபாயகரமான பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தி, அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட ஆட்டத்தை முடித்துவிட்டார். அதன்பின்னர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரையும் வீழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி.

ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி கேகேஆர் அணி அபார வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார் வருண் சக்கரவர்த்தி. சுனில் நரைனுக்கு பிறகு ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் வருண் தான். 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்து  59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. ஆட்டநாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி ஏற்கனவே 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருப்பதால், கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டதால் இந்த தோல்வி டெல்லி கேபிடள்ஸுக்கு பெரிய பாதிப்பில்லை. ஆனால் கேகேஆருக்கு இது மிக முக்கியமான வெற்றி.
 

click me!