சிஎஸ்கே அணி படுமட்டமான பேட்டிங்.. தனி ஒருவனாக சிஎஸ்கேவின் மானம் காத்த சாம் கரன்.. MIக்கு மிக எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Oct 23, 2020, 9:27 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவரில் வெறும் 114 ரன்கள் மட்டுமே அடித்து 115 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனில் முதல் 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சிஎஸ்கே, 11வது போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது.

ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால், கேப்டன்சி செய்யும் பொல்லார்டு, டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா ஆகிய மூவரும் நீக்கப்பட்டு, இம்ரான் தாஹிர், ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர். 

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டுப்ளெசியும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய ட்ரெண்ட் போல்ட், ரன்னே விட்டுக்கொடுக்காமல் ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் ராயுடு(2) மற்றும் ஜெகதீசன்(0) விக்கெட்டை பும்ரா வீழ்த்த, அதற்கடுத்த ஓவரை வீசிய போல்ட், டுப்ளெசியை(1) வீழ்த்தினார். 3 ஓவரில் வெறும் 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே அணி.

அதன்பின்னர் தோனியும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்ததால் அவர்கள் அணியை கரை சேர்த்துவிடுவார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக ஜடேஜா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜாவை போல்ட் வீழ்த்த, தோனியை 16 ரன்களுக்கு ராகுல் சாஹர் வீழ்த்த, சிஎஸ்கே அணி 6.4 ஓவரில் 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது சிஎஸ்கே.

அதன்பின்னர் தீபக் சாஹர் ரன்னே அடிக்காமலும், ஷர்துல் தாகூர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தனி ஒருவனாக போராடினார் சாம் கரன். 8 விக்கெட்டுகள் விழுந்த பின்னர், 9வது விக்கெட்டுக்கு சாம் கரனுடன் ஜோடி சேர்ந்த இம்ரான் தாஹிர், விக்கெட்டை இழந்துவிடாமல் சாம் கரனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

பொறுப்புடனும் அதேவேளையில் மிகச்சிறப்பாகவும் ஆடிய சாம் கரன், ட்ரெண்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி அரைசதம் அடித்தார். 47 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்த சாம் கரன், இன்னிங்ஸின் கடைசி பந்தில் போல்ட் வீசிய யார்க்கரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். 

சாம் கரனின் போராட்டத்தால் 20 ஓவரில் 114 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 115 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் அபாரமாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் போல்ட்.
 

click me!