இந்தியாவில் இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி வந்த வேலையை முடிச்சுடுவேன்.. ஜானி பேர்ஸ்டோ சபதம்

By karthikeyan VFirst Published Apr 21, 2019, 4:03 PM IST
Highlights

இந்த சீசனில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை சன்ரைசர்ஸ் அணி எடுத்தது. அவரும் தன் மீதான நம்பிக்கையை ஏமாற்றாமல் அபாரமாக ஆடினார். வார்னரும் பேர்ஸ்டோவும் இணைந்து சன்ரைசர்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருகிறது. ஐபிஎல்லில் பல நாட்டு வீரர்கள் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர்.

3 முறை சாம்பியன்களான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன. சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் நல்ல நிலையில் உள்ளன. இந்த மூன்று அணிகளுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப், கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும்.

கடந்த சீசனில் இறுதி போட்டி வரை சென்ற சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் வார்னர் திரும்பியிருப்பது கூடுதல் பலம். மேலும் இந்த சீசனில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை சன்ரைசர்ஸ் அணி எடுத்தது. அவரும் தன் மீதான நம்பிக்கையை ஏமாற்றாமல் அபாரமாக ஆடினார். வார்னரும் பேர்ஸ்டோவும் இணைந்து சன்ரைசர்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். 

அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடி 4ல் வெற்றியுடன் 8 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது. அந்த அணி அடித்த ரன்களில் சுமார் 70 சதவிகிதம் ரன்கள் வார்னரும் பேர்ஸ்டோவும் அடித்ததுதான். அந்தளவிற்கு சன்ரைசர்ஸ் அணி தொடக்க வீரர்களை சார்ந்துள்ளது. அதை உணர்ந்து இவர்களும் நன்றாக ஆடிவருகின்றனர். 

இந்நிலையில், இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் ஒரு ஒருநாள் போட்டியிலும் அதன்பின்னர் உலக கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆட உள்ளது. அதனால் வரும் 23ம் தேதியுடன் பேர்ஸ்டோ இங்கிலாந்து திரும்ப உள்ளார். சன்ரைசர்ஸ் அணி இன்று கேகேஆர் அணியுடனும் அடுத்ததாக சிஎஸ்கே அணியுடனும் மோதுகிறது. அத்துடன் 23ம் தேதி பேர்ஸ்டோ இங்கிலாந்து திரும்புகிறார். 

பேர்ஸ்டோ நன்றாக ஆடி ரன்களை குவித்துவரும் நிலையில், அவர் சீசனின் பாதியில் ஐபிஎல்லில் இருந்து விலகி செல்வது, சன்ரைசர்ஸ் அணிக்கு இழப்புதான். எனினும் அந்த அணி மார்டின் கப்டிலை பெற்றிருப்பதால், அவரை வார்னருடன் தொடக்க வீரராக களமிறக்கும். 

எனினும் இதற்கிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜானி பேர்ஸ்டோ, இதுவரை சன்ரைசர்ஸ் அணிக்கு எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது. நாங்கள் நல்ல நிலையில்தான் உள்ளோம். இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் 5 இடத்திற்குள் இருப்பது பெருமையாக இருக்கிறது. அடுத்த 2 போட்டிகளிலும் சிறப்பாக ஆடி, நான் இங்கிருந்து கிளம்புவதற்குள் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெறுவதை உறுதி செய்துவிட்டுத்தான் கிளம்புவேன் என்று திட்டவட்டமாக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 
 

click me!